ஷூட்டிங்கே இன்னும் முடியல.. வியாபாரத்தில் கோடிகளை குவிக்கும் அஜீத்தின் விடாமுயற்சி!

Aadmika
Jan 17, 2024,03:07 PM IST

சென்னை: அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டின் இன்னும் முழுவதுமாக முடியாத நிலையில், படத்தின் வியாபாரம் சூடுபிடித்து, ப்ரீ ரிலீஸ் பிசினசிலேயே போட்ட பணத்தை எடுத்தது மட்டுமல்லாமல், கோடிகளில் லாபம் பார்த்து வருகிறது படக்குழு.


டைரக்டர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விடாமுயற்சி. லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் டைட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டு, ஷூட்டிங் துவங்கப்பட்டது.


இந்த படம் முழுக்க முழுக்க அஜர்பைஜானில் நடந்து வருகிறது. முதல் கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் சில வாரங்களில் படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் முடிக்க போகிறார்களாம். கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.




படத்தின் ஷூட்டிங் முடிந்து, ரிலீஸ் தேதி முடிவு செய்வதற்கு முன்னதாக இப்போதே படத்தின் வியாபாரத்தை துவக்கி விட்டது படக்குழு. இந்த படத்தின் டிவி வெளியீட்டு உரிமத்தை சன் டிவியும், ஓடிடி ரிலீஸ் உரிமத்தை நெட்பிளிஸ் நிறுவனமும் வாங்கி விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த இரு நிறுவனங்களும் ரூ.250 கோடிக்கு விடாமுயற்சி படத்தை வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.225 கோடி தான். இந்த படத்திற்கு அஜித்திற்கு சம்பளமாக மட்டும் ரூ.160 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.


ஆனால் இந்த தகவல் உண்மை தான் என்பதை லைகா நிறுவனமே தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லைகா தனது எக்ஸ் தள பதிவில், விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்று விட்டதாகவும், தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஓடிடியிலும் விடாமுயற்சி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. நெட்பிளிக்ஸ் தெற்கு நிறுவனமும் இதை உறுதி செய்துள்ளது. 


படத்தின் ஷூட்டிங்கை முடிப்பதற்கு முன்பே போட்ட பணத்தை எடுத்ததுடன், கூடுதலாக ரூ.25 கோடியை லாபமாக பெற்று விட்டதால் விடாமுயற்சி படக்குழு செம குஷியாகி உள்ளனர். டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிம விற்பனையிலேயே 25 கோடி லாபம் என்றால், இன்னும் தியேட்டர் வெளியீட்டு உரிமம் உள்ளிட்ட விஷயங்களின் எத்தனை கோடி லாபம் கிடைக்கும் என கணக்கு போட்டு ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். பொங்கல் கொண்டாட்டமாக விடாமுயற்சி படத்திற்கு இப்படி ஒரு அப்டேட் வந்திருப்பது அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அடிக்கடி எக்ஸ் தளத்தில் #Vidamuyarchi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.