மழை வரப் போகுதே.. 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு.. டிசம்பர் 11 டூ 13 ல் கனமழை வாய்ப்பு!

Manjula Devi
Dec 07, 2024,09:56 AM IST

சென்னை: வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும், இதனால் தமிழகத்திற்கு மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி தற்போது வரை பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 25 நாட்கள் உள்ளன. ஆனால் அதற்கு முன்பாகவே நேற்று வரை வடகிழக்கு பருவமழை 18 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.இதற்கிடையே வங்க கடலில் மீண்டும் உருவாக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து கூடுதலாக மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.இதன் காரணமாக  தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் வரும் பத்தாம் தேதி வரை மிதமான மழைக்கு  வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழகப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.பின்னர் 12 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் தமிழக இலங்கை கடற்கரை பகுதிகளை அடையக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 11ஆம் தேதி கனமழை: 


 மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 11ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


12 ஆம்தேதி கன மழை:


செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி, மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் டிசம்பர் 12ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னையில் அதிகாலை வேளையில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.


அதேபோல் ஆந்திராவில் டிசம்பர் 12 13 ஆகிய இரண்டு நாட்கள் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்