Low pressure..திடீரென போக்கு காட்டிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதில் தாமதம்

Manjula Devi
Dec 10, 2024,10:25 AM IST

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று  வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


தென்கிழக்கு வங்க கடல் மற்றும் கிழக்கிந்திய பெருங்கடல் பகுதிகளில் கடந்த ஏழாம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த எட்டாம் தேதியே  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் இந்த காற்றழுத்த பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது . ஏனெனில் தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதில் இயற்கை காலநிலை சாதகமாக இல்லாததால் இரண்டு நாட்களாக வலுப்பெறாமல் அதே இடத்தில் நிலவி வருகிறது.




தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்கள் கன மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை, நாளை மறுநாள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரையிலான மழை பெய்யக்கூடும் என்பதால் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்