புஷ்பா2.. டைம் சரியில்லை.. படத்துக்கு கூட்டிச் செல்லாத காதலன்.. கோபத்தில் காதலியின் விபரீத முடிவு!
லக்னோ: புஷ்பா 2 படம் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருந்தாலும் கூட அந்தப் படம் தொடர்பான சர்ச்சை செய்திகளும் அதிகமாகவே வருகின்றன. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில், புஷ்பா 2 திரைப்படத்தை பார்ப்பதற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் காதலி 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2. இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் உலக அளவில் 1500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது.
ஆனால் இந்தப் படம் பல சர்ச்சைகளிலும் சிக்கியது. ஒரு பெண்ணின் உயிரில்தான் இந்தப் படத்தின் வசூல் வேட்டை தொடங்கியது அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சியை காண ஹைதராபாத் சந்தியா தியேட்டருக்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்த போது, அவரை காண பெரும் ரசிகர் பட்டாளம் திரண்டது. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நடிகர் அல்லு அர்ஜூன் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கினார். இருப்பினும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அதிரடியாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அதேபோல் நேற்று மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், புஷ்பா 2 படம் பார்க்க வந்திருந்த தலைமறைவு கொலையாளி மற்றும் கடத்தல் நபரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இதனால் தியேட்டரில் பரபரப்பு ஏற்பட்டது.
இப்படி புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் ஆன நாள் முதல் தற்போது வரை பல்வேறு சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் வலுத்து வந்த நிலையில் தற்போது இப்படத்தை பார்ப்பதற்கு காதலன் மறுப்பு தெரிவித்ததால் ஒரு பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த காதலர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதாவது காதலி தனது காதலனிடம் புஷ்பா 2 படத்தை பார்க்க அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் காதலன் படம் பார்க்க வேண்டாம் என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் காதலி கோபத்தில் திடீரென ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். பலத்த காயமடைந்த காதலியை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது போலீசார் காதலனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்