பிரதமர் மோடியின் தமிழ் பற்று தெரிந்த ஒன்றுதானா?.. அல்லது.. தேர்தலுக்கானதா?

sahana
Jan 02, 2024,05:45 PM IST
- சஹானா

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த பிரதமர் மோடி, விமானத்துறை, ரயில்வே, நெடுஞ்சாலை, ஆயில், காஸ், கப்பல்துறை மற்றும் உயர் கல்வித்துறை என மொத்தம் ரூ.20,140 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி தமிழ் மொழி பற்றியும், பண்பாடு பற்றியும் மனம் திறந்து பேசினார். அதாவது, ‛‛நான் எப்போதெல்லாம் தமிழ்நாடு வருகிறேனோ அப்போதெல்லாம் எனக்கு புதிய உத்வேகம் கிடைக்கிறது. தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் என்னால் இருக்க முடியவில்லை. உலகின் எந்த இடத்திற்கு சென்றாலும் தமிழ் மொழியை புகழாமல் நான் இருந்ததில்லை. எனக்கு பல தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள்; அவர்களிடம் இருந்து தமிழ் பண்பாட்டை அறிகிறேன். 



தமிழ் பண்பாட்டை பற்றி பேசாத நாளே இல்லை. தமிழ் பண்பாடு உலகெங்கும் பரவ வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. தமிழக இளைஞர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர்களிடம் இருக்கும் உற்சாகம்தான் வளர்ச்சியடைந்த பாரதத்தின் நம்பிக்கையாக மாறும்’’ எனப் பேசியிருந்தார்.

தமிழர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தாண்டின் முதல் நிகழ்ச்சியாக தமிழ்நாடு வந்துள்ள மோடி, தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழி மீதான பற்றை வெளிப்படுத்திருப்பது தேர்தலுக்காகவா என்ற விவாதம் துவங்கியுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்ற சில நிகழ்ச்சிகளில் தமிழ் மொழி பற்றியும், திருக்குறள் பற்றியும் பேசியுள்ளார். ஆனால் அந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழர்கள் கணிசமான அளவில் பங்கேற்ற நிகழ்ச்சிகளாக இருந்தன. 

வெளிநாடுகளில் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழை பற்றி பேசியிருந்தாலும், வெளிநாடு வாழ் தமிழர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியாகவே அது இருந்துள்ளது. தமிழ்நாட்டில் அல்லாமல் வேறு மாநிலங்களில் நடைபெற்ற பொதுவான நிகழ்ச்சியில் அவர் தமிழை பற்றி இவ்வளவு பெருமையாக பேசியது மிகவும் சொற்ப எண்ணிக்கையிலானது. 

அப்படியிருக்கும் சூழலில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழ் பற்றை வெளிப்படுத்தினால் பா.ஜ.க.,வின் மீதும், மோடியின் மீதும் பார்வை திரும்புவது இயல்பு. அதை கச்சிதமாக பயன்படுத்தி, தேர்தலை கணக்கில் கொண்டு தன்னிடம் உள்ள தமிழ் பற்றையே கூடுதலாக வெளிப்படுத்துவது என்ற மாஸ்டர் பிளானை பிரதமர் மோடி கையில் எடுத்ததாகவே இது பார்க்கப்படுகிறது. அவரது தமிழ் நேச அரசியல், இந்த தமிழ் தேசத்தில் எடுபடுமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

"தமிழ்  குடும்பமே... மாணவக் குடும்பமே"



அதேபோல இன்றைய நிகழ்ச்சியில் அவர் புதிதாக 2 வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார்.. ஒன்று எனது "மாணவக் குடும்பமே".. இன்னொன்று "தமிழ் குடும்பமே".. இது இரு பெரும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக கருதப்படுகிறது. மாணவ சமுதாயத்தினரை தன் பக்கம் இழுக்கும் உத்தியாகவே மாணவக் குடும்பமே என்ற வார்த்தையை அடிக்கடி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கூறியதாக தெரிகிறது. அது உண்மையாக இருக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் இதைக் குறிப்பிட்டு கோவை தெற்குத் தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் டிவீட் போட்டுள்ளார். 

ஆக மொத்தத்தில் இன்றைய விழாவில் திமுக தரப்புக்கு முன்பாகவே தனது நோக்கத்தை தெளிவாக அரங்கேற்றி விட்டுப் போயுள்ளது பாஜக தரப்பு என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது. முன்பு சென்னை விழா ஒன்றில் பிரதமர் முன்னிலையில் தனது கட்சியினரை வைத்து அதிரடி காட்டியது திமுக. அதற்குப் பதிலடியாக இன்றைய திருச்சி விழாவை பாஜக பயன்படுத்திக் கொண்டு விட்டதாகவும் பேசப்படுகிறது.