ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வேதனை.. மருத்துவ மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Meenakshi
May 17, 2024,01:50 PM IST

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாடி அதிக பணத்தை இழந்த வேதனையில், சென்னை கொருக்குப்பேட்டையில் மருத்துவ மாணவன்  தனுஷ்  என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் முனுசாமி. லாரி டிங்கரிங்  தொழிலி்ல ஈடுபட்டுள்ளார். இவரது மகன் தனுஷ் (23). இவர் தனியார் மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே ஆன்லைனில் ரம்மி விளையாடி  வந்துள்ளார். இந்த விளையாட்டின் மூலம் அதிக பணமும் இழந்துள்ளார். 




இதனால் எப்படியாவது இழந்த பணத்தை பெற்று விட வேண்டும் என்று தொடர்ந்து விளையாட நினைத்த இவர், தன்னிடம் பணம் இல்லாததால் தனது தந்தையிடம் ரூ.24 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. ரூ.4000 மட்டும் தான் உள்ளது என்று தெரிவித்து அதையும் ஆன்னலைன் மூலம் கொடுத்துள்ளார். அதை பெற்ற தனுஷ் வீட்டிற்கு சென்று கதவை அடைத்து கொண்டார்.


அதன் பின்னர் வெகு நேரம் ஆகியும் தனுஷ் வராததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் வந்த போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அப்போது தனுஷ் மின் விசிறியில், தூக்கிட்டு தொங்கியுள்ளார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலீசார் தனுஷ்சின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உயிரை மாய்த்துக் கொள்வது எதற்கும் தீர்வு கிடையாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தைரியமாகவும், பயப்படாமலும் அதை எதிர்கொண்டு சமாளிக்க முயல வேண்டும். தற்கொலை எண்ணம் வந்தால் யாருடனாவது மனம் விட்டுப் பேசுங்கள். பிரச்சினைக்குத் தீர்வு காண முயலுங்கள்.