"முன்பு சனாதனம் இன்று மோடி குடும்பம்" பாஜகவின் பிரச்சார வேட்டைக்கு தீனி கொடுக்கும் எதிர்க்கட்சிகள்!

Su.tha Arivalagan
Mar 05, 2024,10:26 PM IST

டெல்லி: பாஜகவின் பிரச்சார வேட்டைக்கு எதிர்க்கட்சிகளே தீனி கொடுப்பது போல் தெரிகிறது. எதிர்க்கட்சிகள் செய்யும் சிறு சிறு தவறுகள், லூஸ் ஸ்டாக் போன்றவற்றை பாஜக மிகப்பெரிய அளவில் பிரச்சார அஸ்திரமாக பயன்படுத்தி வருகிறது. அதை வைத்து தனது டார்கெட் வாக்காளர்களிடம் அது ஈஸியாக ஸ்கோர் செய்கிறது.


மத்திய பாஜக அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகள் குறித்து பெருமளவில் மக்களிடம் எடுபடாத நிலையில், பாஜகவை நோக்கி எதிர் கட்சிகள் பாய்ச்சும் எதிர்ப்பு பிரச்சாரங்களே மிகப்பெரிய அளவில் பாஜகவுக்கு கை கொடுப்பதாக தெரிகிறது.


எதிர் கட்சிகள் தரப்பில் அவர்களது தலைவர்கள் பலர் நிறைய லூஸ் டாக் விடுகிறார்கள். தேவையில்லாத விஷயங்களைப் பேசுகிறார்கள். எதைப் பேச வேண்டுமோ அதை விட்டு விட்டு அவர்கள் பேசும் சாதாரண விஷயங்களை, பாஜக சீரியஸாக்கி விடுகிறது. அவர்கள்  உணர்ச்சி வசப்பட்டு பேசும் பேச்சுக்கள் பாஜகவுகே உண்மையில் பலனை கொடுப்பதாக பலரும் சொல்கிறார்கள்.


பாஜக வாக்கு வங்கியை வலுப்படுத்தும் சனாதன எதிர்ப்பு: 




உதாரணத்திற்கு சனாதனம் குறித்து திமுக தரப்பில் தொடர்ந்து பேசி வருவது பாஜகவுக்கு வட இந்தியாவில் வாக்கு வங்கியை வலுப்படுத்துவதாக தெரிகிறது. காரணம் சனாதானம் குறித்த மதிப்பும், நம்பிக்கையும் அதிகம் கொண்டுள்ளவர்கள் வட இந்தியாவில் உள்ள இந்துக்கள். அவர்களுக்கு திமுகவின் இந்த சனாதான எதிர்ப்பு பேச்சானது, மிகப்பெரும் கோபத்தையும் அதிருப்தியும் ஏற்படுத்தி உள்ளது. இந்த கோபமும் அதிருப்தியும் வாக்குகளாக மாறும் போது அது காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும்.


காரணம், பாஜகவுக்கு எதிராக அங்கு இருப்பது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிதான். அந்தக் கூட்டணியில் திமுகவும் இருக்கிறது என்பதால்தான் பாஜக அதை குறி வைத்து வட இந்தியாவில் லாபம் பார்க்கிறது. 

திமுகவின் சனாதான எதிர்ப்பு நிலைப்பாடானது திமுக இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணிக்கு வட இந்தியாவில் மேலும் பலவீனத்தையே அளிக்கும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்து.


இதனால்தான் தேவையில்லாமல் வேண்டும் என்றே திமுகவை தொடர்ந்து பாஜக சீண்டி வருகிறது என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். அதாவது இங்கே அடித்தால் அங்கே வலிக்கும் என்று சொல்வார்கள் இல்லையா.. அந்த பழைய பாணிதான்.. திமுக தவறு செய்தால், அது காங்கிரஸை காலி செய்யும் என்பது பாஜகவின் திட்டம். அது கிட்டத்தட்ட கரெக்டாக நடந்து வருவதால் பாஜக செம குஷியாக உள்ளது.


மோடி குடும்ப பிரச்சாரம்:




தற்போது இன்னொரு அஸ்திரத்தை பாஜக எதிர்க்கட்சிகளிடமிருந்து பெற்றுள்ளது. இந்திய அரசியலின் மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடி குறித்து கூறும் போது அவர் குடும்பம் இல்லாதவர் என்று கூறியதை இன்று நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் பிரச்சாரமாகவே பாஜக மாற்றிவிட்டது. "மோடியின் பரிவார்..  மோடியின் குடும்பம்" என்ற முழக்கம் என்று நேற்றிலிருந்து பாஜகவினரால் முன்னெடுக்கப்பட்டு அது ஒரு மிகப்பெரிய அஸ்திரமாகவே மாற்றப்பட்டுவிட்டது. டிவிட்டரில் அதுதான் டிரெண்டிங்காக உள்ளது.


லாலு பிரசாத் சாதாரணமாக பிரயோகித்த ஒரு வார்த்தையை அவர்கள் மிகப்பெரிய பிரச்சாரம் கோஷமாக மாற்றி இருப்பது பாஜகவின் தீவிர திட்டமிடலின் ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியே நேற்று இதுகுறித்து சென்னை பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிகரமாக பேசியதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது வட இந்தியாவில் நிச்சயம் பாஜகவுக்கு ஆதரவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.


எதிர்க்கட்சிகள் வீசும் பந்தில் சிக்ஸர் அடிக்கும் பாஜக:




பாஜக குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைக்கும் போதெல்லாம் பாஜக அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மட்டுமே அதிக அளவில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. மத்திய அரசு கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்தும் இந்தியாவுக்கு தேவையான எந்த ஒரு நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்பது எதிர் கட்சிகளின் பிரதான முழக்கமாக உள்ளது. ஆனால் இதற்கு நேரடியாக பதில் தருவதை தவிர்க்கும் பாஜக எதிர்க்கட்சிகள் எந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்களோ அதை பிரதானப்படுத்தி, அதை தான் நம்பும் வாக்காளர்களிடம் மிகப்பெரிய அளவில் கொண்டு சென்று அவர்களை தன் பக்கம் திருப்பும் உத்தியை கையாளுகிறது. இந்த உத்தியானது, பாஜகவுக்கு ஒர்க் அவுட் ஆவதுதான் இங்கு முக்கியமானது.


இந்தப் பிரச்சார உத்தியை எதிர்க்கட்சிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றன. மக்கள் நமக்கு கண்டிப்பாக ஓட்டு போட்டு விடுவார்கள் என்ற அசாத்திய மிதப்பில் உள்ளனர். இது நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். காரணம், பாஜகவின் வாக்காளர்கள் யார் என்பது உலகுக்கே தெரியும். அந்த வாக்கு வங்கியை பாஜக மிக மிக சாதுரியமாக ஸ்திரப்படுத்திக் கொண்டே வருகிறது. அதேபோல பிற வாக்கு வங்கிகளையும் உடைத்தும், வளைத்தும் தன் பக்கம் திருப்பிக் கொண்டுள்ளது. இந்த வாக்கு வங்கிகளை அது மேலும் வலுப்படுத்தி விட்டால், எதிர்காலத்தில் பாஜகவை வீழ்த்த முடியாத நிலை கூட உருவாகலாம்.


லூஸ் டாக்குகளை தவிர்த்தால் நல்லது:




எதிர்க்கட்சித் தலைவர்கள் தேவையில்லாமல் விடும் லூஸ் டாக்குகளை நிறுத்த வேண்டும். ஒரே குரலில் அவர்கள் முழங்க வேண்டும்.. தேவையில்லாத விஷயங்களை பேசக் கூடாது. மக்களிடம் சென்றடையக் கூடிய வகையில் பிரச்சாரத்தை வலுவாக்க வேண்டும். இதற்கு சிறந்த திட்டமிடல் வேண்டும். கேர்லெஸ்ஸாக இருந்தால் நிச்சயம் இழப்புதான் பரிசாக கிடைக்கும்.  எந்த வார்த்தை பேசுவதாக இரு்நதாலும் பல முறை யோசித்துப் பேச வேண்டும். எந்த மக்களையும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. அப்படி செய்தால் இழப்பு எதிர்க்கட்சிகளுக்கே. மேலும் யாரை இவர்கள் அதிகமாக விமர்சிக்கிறார்களோ அவர்கள் பாஜக பக்கம் போய் விடும் அபாயமும் இருக்கிறது.


பாஜகவின் முக்கிய நோக்கமே எதிர் கட்சிகளுக்கிடையே இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி அதை பெரிதுபடுத்தி காட்டி பெரும்பான்மையான வாக்காளர்களை தன் பக்கம் ஈர்ப்பதே என்பது இங்கு எதிர்க்கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. அப்போதுதான் இவர்கள் நினைப்பது நடக்கும்.. இல்லாவிட்டால் பாஜகதான் லாபம் பார்க்கும்.