Loksabha Speaker: மீண்டும் ஓம் பிர்லாவை நிறுத்திய பாஜக.. இந்தியா கூட்டணி சார்பில் சுரேஷ்.. பரபரப்பு!
டெல்லி: லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் போட்டியின்றி தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு தற்போது தேர்தல் நடைபெறவுள்ளது. லோக்சபா சபாநாயகர் பதவிக்கு இதுவரை தேர்தல் நடந்ததில்லை என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
18வது லோக்சபாவின் தொடக்கமே அதிரடியாகவும், ஆக்ரோஷமாகவும்தான் இருக்கிறது. நேற்று சபை முதல் முறையாக கூடியபோதே எதிர்க்கட்சிகள் போட்ட முழக்கத்தால் லோக்சபாவே ஆடிப் போனது. இந்த நிலையில் இன்று 2வது நாளில் இன்னொரு பரபரப்பு அரங்கேறியுள்ளது.
ராஜ்நாத் சிங் - கார்கே பேச்சு முறிவு
சபாநாயகர் பதவிக்கு மீண்டும் ஓம் பிர்லாவையே நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் அவர் ஆலோசித்தபோது, சபாநாயகர் பதவிக்கு நீங்கள் யாரை நிறுத்தினாலும் ஆதரிக்கிறோம். அதேசமயம், மரபுப்புபடி துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கே தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக மீண்டும் பேசுவதாக ராஜ்நாத் சிங் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மீண்டும் கார்கேவை தொடர்பு கொள்ளவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஓம் பிர்லாவை மீண்டும் பாஜக வேட்பாளராக அறிவித்தது. அவரும் சபாநாயகர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். பாஜக தரப்பின் இந்த நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த இந்தியா கூட்டணி கட்சிகள் தாங்களும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தன. லோக்சபாவின் மூத்த உறுப்பினரான கேரள மாநிலத்தைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷை வேட்பாளராக அறிவித்தது இந்தியா கூட்டணி. அவரும் உடனடியாக மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது. நாளை முற்பகல் 11 மணிக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக தேர்தல்
லோக்சபா சபாநாயர் பதவிக்கு இதுவரை தேர்தலை நடந்ததில்லை. அனைத்து முறையும் போட்டியின்றிதான் சபாநாயகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது என்பதால் பரபரப்பு எழுந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் தற்போது லோக்சபாவில் வலிமையாக உள்ளனர். இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, லோக்சபாவில் எந்த ஒரு காரியத்தையும் அத்தனை எளிதாக நிறைவேற்றி விட முடியாது என்பதை சுட்டிக் காட்டும் விதமாகவே இந்தியா கூட்டணி வேட்பாளரை நிறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.