மார்ச் 22ல் திருச்சியில் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. ஏப்ரல் 17 வரை டூர்!
சென்னை: முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சாரம் மார்ச் 22ம் தேதி திருச்சியில் தொடங்குகிறது. ஏப்ரல் 17ம் தேதி மத்திய சென்னையில் தனது பிரச்சாரத்தை முதல்வர் நிறைவு செய்கிறார்.
திமுக தனது தேர்தல் தொகுதிப் பங்கீட்டை முடித்து விட்டது. இன்று தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு, கையோடு வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது. இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை் தொடங்கவுள்ளார்.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மார்ச் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருச்சி மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பிரச்சாரத்தை முதல்வர் மு க ஸ்டாலின் மேற்கொள்கிறார். மார்ச் 23ஆம் தேதி தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் தனி தொகுதிகளுக்கான பிரச்சாரத்தை அவர் மேற்கொள்வார்.
25ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின். மார்ச் 26 தூத்துக்குடி - இராமநாதபுரம், மார்ச் 27 தென்காசி - விருதுநகர், மார்ச் 29 தர்மபுரி -கிருஷ்ணகிரி, மார்ச் 30 சேலம் - கிருஷ்ணகிரி, மார்ச் 31 ஈரோடு - நாமக்கல் - கரூர் தொகுதிகளில் முதல்வர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஏப்ரல் இரண்டாம் தேதி வேலூர் மற்றும் அரக்கோணத்தில் பிரச்சாரம் செய்யும் முதல்வர், மூன்றாம் தேதி திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் பிரச்சாரம் செய்து பேசுகிறார். ஏப்ரல் ஐந்தாம் தேதி கடலூர் - விழுப்புரம், ஏப்ரல் 6 சிதம்பரம் - மயிலாடுதுறை, 7 புதுச்சேரி, ஏப்ரல் 9 மதுரை - சிவகங்கை, ஏப்ரல் 10 தேனி - திண்டுக்கல் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் திமுக தலைவர்.
ஏப்ரல் 12ஆம் தேதி திருப்பூர் மற்றும் நீலகிரியில் பிரச்சாரம் செய்யும் முதல்வர் ஸ்டாலின், 13ஆம் தேதி கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். ஏப்ரல் 15 ஆம் தேதி திருவள்ளூர் மற்றும் வடசென்னையில் பிரச்சாரம் செய்யும் முதல்வர், 16ஆம் தேதி காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரம் மேற்கொள்வார்.
தனது கடைசி நாள் பிரச்சாரமாக ஏப்ரல் 17ஆம் தேதி தென்சென்னை மற்றும் மத்திய சென்னையில் பிரச்சாரம் செய்து தனது லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார் முதல்வர் மு. க.ஸ்டாலின்.