வேட்பாளர் அறிவிப்பில்.. புயல் வேகத்தில் பாஜக.. பார்த்து பார்த்து லிஸ்ட் வெளியிடும் காங்கிரஸ்!

Aadmika
Mar 15, 2024,07:51 PM IST

டில்லி : லோக்சபா தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். இன்னும் ஓரிரு நாட்களில் அல்லது அதிபட்சமாக இன்னும் ஒரு வாரத்திற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடலாம் என தேர்தல் கமிஷன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 


தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே லோக்சபாவில் மொத்தமுள்ள 543 இடங்களில் 250 க்கும் அதிகமான தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்து விட்டது. முதலில் 175 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட விஐபி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளையும் அறிவித்து விட்டது பாஜக. இந்நிலையில் அடுத்து 72 பேரைக் கொண்ட இரண்டாவது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 267 தொகுதிகளில் பாஜக போட்டியிட உள்ளது.




தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் தொடர்ந்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதால் விரைவில் மூன்றாவது வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி பங்கீடு முடிவாகாவிட்டாலும் பல இடுங்களில் பிரச்சாரத்தையே துவங்கி விட்டது பாஜக. ஆனால் பிரதான எதிர்க்கட்சியும் பழம்பெரும் கட்சியுமான காங்கிரஸ் இதுவரை நாடு முழுவதும் வெறும் 82 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ளது.


தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பல மாநிலங்களில் காங்கிரஸ் இன்னும் கூட்டணியையே முடிவு செய்யாமல் உள்ளது. ஏற்கனவே இந்தியா கூட்டணியில் இருந்து பல கட்சிகள், பல முக்கிய தலைவர்கள் பிரிந்து சென்று பாஜக.,வில் இணைந்து விட்டார்கள். அதேசமயம், வடக்கில் பல தலைவர்கள் காங்கிரஸ் பக்கம் வந்துள்ளனர்.


தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட சில தென் மாநிலங்களில் மாநில கட்சிகள் ஒதுக்கும் சொற்ப தொகுதிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையே உள்ளது. வட மாநிலங்கள் சிலவற்றிலும் மாநில கட்சிகளிடம் பிடிவாதமாக, கடைசி வரை போராடியே பல முக்கிய தொகுதிகளை பெற்றுள்ளது. 


அதே போல் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரசின் முக்கிய தலைவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் என்பதை கூட காங்கிரஸ் இன்னும் முடிவு செய்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது. இதனால் இந்த தேர்தலில் காங்கிரசின் நிலை என்ன ஆகும் என்பதை நினைத்து அக்கட்சி தொண்டர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.


பாஜக காட்டும் வேகத்தில் பாதியாவது காட்டினால் மக்களின் மனதைக் கவர முடியும்.. அதற்கு முற்றிலும் சுறுசுறுப்பு மோடுக்கு காங்கிரஸ் மாறியாக வேண்டும்.. மாறுமா காங்கிரஸ்.