சூப்பரப்பு.. வீறு கொண்டெழுந்த சென்னை வாக்காளர்கள்.. 2019 தேர்தலை விட அதிக வாக்குகள் பதிவாகி அசத்தல்!
சென்னை: 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை விட சென்னையின் ை3 தொகுதிகளிலும் கிட்டத்தட்ட 10 சதவீதம் கூடுதல் வாக்குகள் பதிவாகி அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வழியாக சென்னை மக்கள் வீறு கொண்டு எழுந்து விட்டனர். ஆனாலும், மொத்த வாக்கு சதவீதத்தில் கடைசி இடங்களில்தான் சென்னை உள்ளது என்பது சற்று வருத்தமான விஷயம்தான்.
காலை வாக்குப்பதிவு ஆரம்பித்த முதலே மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கினை செலுத்தி வந்தனர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வேகமாக நடந்து வந்த வாக்குப் பதிவு சென்னையில் மட்டும் சுமாரான வேகத்தில்தான் போய்க் கொண்டிருந்தது. சரித்தான் வழக்கம் போல இந்த முறையும் வாக்குப் பதிவு குறைவாகவே இருக்கும் என்றுதான் பலரும் ஏமாற்றமடைந்திருந்தனர்.
தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். சென்னையில் காலையிலிருந்து பிற்பகல் வரை மந்தமான வாக்குப் பதிவு நடந்தது. ஆனால் அதற்குப் பின்னர் திடீர் வேகம் பிடித்தது. வெயில் சற்று தணிந்த நிலையில் ஏராளமான வாக்காளர்கள் வெளியில் வரத் தொடங்கினர். இதனால் வாக்குப் பதிவு விகிதம் கிடுகிடுவென ஏறத் தொடங்கியது.
இரவு 7 மணி நிலவரத்தைப் பார்த்தபோது பலரும் ஆச்சரியமடைந்தனர். காரணம் கடந்த 2019 தேர்தலை விட கிட்டத்தட்ட 10 சதவீத அளவுக்கு கூடுதலான வாக்குகள் சென்னையில் பதிவாகியுள்ளன. வட சென்னையில் 2019 தேர்தலில் 64.04 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்றைய வாக்குப் பதிவில் இது 69.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கிட்டத்தட்ட 5 சதவீதம் அதிகமாகும். மத்திய சென்னையில் கடந்த தேர்தலில் 58.75 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இன்றைய தேர்தலில் இது 67.35 சதவீதமாக எகிறியுள்ளது. மத்திய சென்னைதான் எப்போதும் குறைந்த அளவில் வாக்களிக்கும். இந்த முறை அவர்களே சுதாரித்திருப்பது ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. கடந்த முறையை விட இந்த முறை கிட்டத்தட்ட 10 சதவீதம் கூடுதலான வாக்குகள் இங்கு பதிவாகியுள்ளன.
தென் சென்னையைப் பொறுத்தவரை 2019 மக்களவைத் தேர்தலில் 56.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால் தற்போது இத்தொகுதியில், 67.82 சதவீத வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர் வாக்காளர்கள். 3 சென்னை தொகுதிகளுமே ஸ்டார் வேட்பாளர்களைக் கண்டுள்ள தொகுதிகள்தான். 3 தொகுதிகளிலும் அதிக அளவிலான வாக்குககள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளம் காரணமா?
சென்னையில் வாக்குப் பதிவு அதிகரிக்க என்ன காரணம் என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன. வழக்கமாக சென்னையில் வெள்ளம் வரும் போதெல்லாம் ஊரே மிதக்கும். மக்கள் கடும் பாதிப்பை சந்திப்பார்கள். இதற்கு விடிவே இல்லையா என்ற விரக்தியும், கோபமும் வருடா வருடம் வரும், பிறகு போய் விடும். இந்த முறையும் சென்னை பெரு வெள்ளத்தை சந்தித்தது. ஆனால் அதற்கு முன்பு பெய்த சில கன மழைகளை சென்னை எளிதாக சமாளித்து விட்டது. பெரிய அளவில் நகரில் தண்ணீர் தேங்கவில்லை.
ஆனால் கடந்த ஆண்டு கடைசியில் வந்த பெரு வெள்ளத்தில் சென்னை சிக்கித் தத்தளித்துப் போய் விட்டது. ஆனாலும் கூட போர்க்கால வேகத்தில் அரசும், மாநகராட்சியும் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக வெள்ள நீர் வேகமாக வடியச் செய்யப்பட்டது. அப்படியும் கூட சில பகுதிகளில் தண்ணீர் வடிய நாட்கள் ஆகின. ஆனாலும் மிகப் பெரிய அசம்பாவிதத்தை சந்திக்காமல் தப்பியது சென்னை.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு மாநில அரசு இழப்பீட்டுத் தொகையை அளித்தது. ஆனால் மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்த வெள்ள நிவாரணத் தொகை வரவில்லை. இதையே திமுக தனது பிரச்சார முழக்கமாக முன்வைத்தது. இது வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுவே கூட சென்னையில் வாக்குப் பதிவு அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சென்னைக்கு நடுவே சிக்கிய மதுரை
அதேசமயம், சென்னை தொகுதிகளுக்குள் புகுந்து மதுரை குறைந்த வாக்கு சதவீதத்தைப் பதிவு செய்துள்ளது. வட சென்னையை விட குறைவாக, 68.98 சதவீத வாக்குகளைப் பதிவு செய்துள்ளது மதுரை. மதுரையில் கடந்த 2019 தேர்தலில் 66.09 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போது அதை விட கூடுதலான வாக்குகள் அங்கு பதிவாகியுள்ளன.
மதுரைக்குக் கீழ் மத்திய சென்னையும், தென் சென்னையும் குறைந்த வாக்குகளைப் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.