"இந்த 2 பாயிண்ட்டையும் பிடிங்க.. இப்படித்தான் பேசணும்".. பேச்சாளர்களை அழைத்து ஆலோசிக்கும் அதிமுக!
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக பேச்சாளர்கள் எப்படிப் பேச வேண்டும், எந்த விஷயத்தை முன்னிலைப்படுத்த வேண்டும், வேட்பாளர்களுக்கு எப்படி உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை கட்சி மேலிடம் ஏற்பாடு செய்துள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதையொட்டி பல்வேறு முன்னேற்பாடுகளில் கட்சிகள் இறங்கியுள்ளன. பல முக்கியக் கட்சிகள் கூட்டணிகளை இறுதிப்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பல கட்சிகளில் கட்சி அமைப்புகளை வலுப்படுத்தி, ஆயத்த நிலைக்குக் கொண்டு சென்று கொண்டுள்ளன. தொகுதிப் பங்கீடுகளும் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் பல்வேறு வேலைகளை செய்து வருகிறது. கூட்டணியை இறுதி செய்ய ஒரு பக்கம் பேச்சுக்கள் நடந்து கொண்டுள்ளன. மறுபக்கம் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது அதிமுக பேச்சாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளனர்.
மார்ச் 1ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் சிராஜ் ஹோட்டலில் காலை 10- மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. இதில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், சிறந்த மேடைப் பேச்சாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டா திட்டங்களையும், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் இன்னல்களையும், திமுக அரசு இழைத்து வரும் பல்வேறு துரோகங்களையும் பட்டி தொட்டியெங்கும் வாழும் மக்களிடம் தேர்தல் பரப்புரை மூலம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை வழங்கப்படவுள்ளதாம்.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு பரப்புரைகளும் கூட உடனடியாக தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.