களத்தில் பிரியங்கா. மகளுக்காக விட்டுக் கொடுக்கும் சோனியா.. கை கொடுக்குமா காங்கிரஸ் மாஸ்டர் பிளான்
டில்லி : லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய பக்கமெல்லாம் சரிவும், நெருக்கடியும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் பாஜக.,வை இந்த முறையாவது வீழ்த்தி விடலாம் என காங்கிரஸ் நம்பிக்கையுடன் உருவாக்கிய இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகின்றன. அதிலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பாஜக., கூட்டணியிலேயே போய் இணைந்து விட்டார்.
மற்றொரு புறம் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒவ்வொரு எம்எல்ஏ.,வாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக பக்கம் போய் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் லேட்டஸ்டாக அசோக் சவான் தனது எம்எல்ஏ., பதவியையும் ராஜினாமா செய்து விட்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில் ராகுல் காந்தி, பாதயாத்திரையை தொடர்ந்து வருகிறார்.
லோக்சபா தேர்தல் சூடுபிடிக்க துவங்கியுள்ள நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முக்கிய முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 77 வயதாகும் சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர் ராஜஸ்தானின் ஜெய்பூர் தொகுதியில் ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என திட்டமிட்டிருக்கிறாராம். இந்த முறை அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் விலகப் போகிறாராம்.
ரேபரேலி தொகுதி
2006ம் ஆண்டு முதல் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு தொடர்ந்து அந்த தொகுதியை தன் வசம் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். ரேபரேலி தொகுதியை காங்கிரசின் கோட்டை என்றே சொல்லலாம். 1950களில் முதல் முறையாக பெரோஸ் காந்தி இந்த தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதற்கு பிறகு தொடர்ந்து இந்த தொகுதி காங்கிரசின் வசமே இருந்து வருகிறது.
இதுவரை இந்த தொகுதியில் காங்கிரசை எதிர்த்து எவரும் வெற்றி பெறவில்லை. அவ்வளவு ஏன்? 2019ம் ஆண்டு காங்கிரஸ், வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு படுதோல்வி அடைந்த போதிலும் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். காங்கிரசின் மற்றொரு குடும்ப தொகுதியான அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணியிடம் ராகுல் காந்தி தோல்வியை சந்தித்த போதும், சோனியா காந்தி, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா?
இருந்தாலும் தற்போது தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு ராஜ்சபாவிற்கு போட்டியிட தீர்மானித்துள்ளாராம் சோனியா காந்தி. தனக்கு பதிலாக வரும் லோக்சபா தேர்தலில் தனது மகள் பிரியங்கா காந்தியை களமிறக்க சோனியா காந்தி திட்டமிட்டிருக்கிறாராம். அப்படி அவர் போட்டியிடும் பட்சத்தில் பிரியங்கா காந்தி தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்து, அவர் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாக இருக்கும்.
2019ம் ஆண்டு பிரியங்கா காந்தி, அரசியலுக்கு வந்த போதே அந்த தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மோடிக்கு எதிராக புதிய முகத்தை காங்கிரஸ் போட்டி களத்தில் இறக்கி இருந்தாலும் அது பாஜக.,வில் பெரும் சவாலாக இருக்கும் என்று கூட சொல்லப்பட்டது. ஆனால் அப்போது கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, பிரியங்காவை உத்திர பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தார்.
அது மட்டுமல்ல காங்கிரஸ் எடுத்த அனைத்து முயற்சிகளையும் தவிடு பொடியாக்கி 2019ல் பாஜக பிரம்மாண்ட வெற்றியை பெற்றதுடன், 2022ல் உத்திரபிரதேசத்திலும் யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
ரேபரேலியை தக்க வைக்குமா காங்கிரஸ்
2024 ம் ஆண்டு நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் காங்கிரசின் நிலை படுமோசமாக இருக்கும் என பல கருத்துகணிப்புகளும் சொல்லி வரும் நிலையில் தங்களின் குடும்ப தொகுதியிலேயே பிரியங்கா காந்தி, முதல் முறையாக தேர்தல் களம் காண இருப்பது காங்கிரசிற்கு பெரிய நம்பிக்கையை அளிக்கும் என சொல்லப்படுகிறது. தனது அம்மா சார்பில் இந்த முறை பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளது தேசிய அளவில் காங்கிரசிற்கு பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
ராகுல் காந்தி மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. கட்சிக்குள் அவர் மீதான செல்வாக்கு சரிய துவங்கி விட்டதால் கட்சிக்கு நேரு குடும்பத்தில் இருந்து நம்பிக்கை தரும் வகையிலும், கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையிலும் ஒருவர் களமிறங்குவது ராஜ தந்திர முடிவாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. மற்ற தொகுதிகளை விட தங்களின் குடும்ப தொகுதியில் போட்டியிட்டால் பிரியங்கா காந்திக்கு பாதுகாப்பாகவும், வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என்றும் காங்கிரஸ் கணக்கு போட்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.