"7 கன்பர்ம்ட்".. சூப்பர் நம்பிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுகவின் "ஸ்கெட்ச்" இதுதான்!

Su.tha Arivalagan
Feb 22, 2024,07:25 PM IST

சென்னை:  நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு தொகுதிகளில் எளிதாக ஜெயிப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறார் எடப்பாடியார் என்பதே அவர்களது ஆச்சரியத்திற்குக் காரணம்.


ஆனால் விஷயம் இருக்குங்க.. நீட்டாக ஸ்கெட்ச் போட்டுத்தான் காய் நகர்த்தி வருகிறார் எடப்பாடி  பழனிச்சாமி என்று இன்சைட் தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தான் எடுத்த முடிவிலிருந்து கிஞ்சித்தும் எடப்பாடி பழனிச்சாமி விலகவில்லை என்கிறார்கள். இந்த முடிவை கட்சி நிர்வாகிகளிடமும் அவர் தெளிவாக தெரிவித்து விட்டாராம். இதனால்தான் அதிமுகவின் நடவடிக்கைகள் ரொம்ப உறுதியாக இருப்பதாக சொல்கிறார்கள்.


அதிமுகவின் திட்டம் இதுதான்




பாமக, தேமுதிகவை கூட்டணியில் இணைப்போம். அவர்களுக்குத் தேவையான தொகுதிகளை கொடுத்தால் அவர்கள் முழுமையாக ஒத்துழைப்பார்கள். இந்த இரண்டு கட்சிகள் மூலமாகவும் வடக்கு மற்றும் மேற்கில் நமது நிலை மேலும் பலப்படும்.  மேற்கு மண்டலமான கொங்கு மண்டலத்தில் நாம் ஏற்கனவே ரொம்ப பலமாகவே இருக்கிறோம். 


செந்தில் பாலாஜி தற்போது வெளியில் இல்லை. அவர் சிறையில் இருக்கிறார். அவர் இப்போதைக்கு வெளியில் வர வாய்ப்பில்லை. சரியான பீல்ட் ஒர்க்கர் இல்லாமல் திமுக தடுமாற்றத்தில் உள்ளது. இதை நாம முழுமையாக பயன்படுத்திக்குவோம். அதை விட முக்கியமாக திமுக அரசு மீதான அதிருப்தியை பூதாகரமாக்கி மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்போது அது நிச்சயம் நமக்கு கை கொடுக்கும்.


திமுக அரசு மீதான அதிருப்தி




திமுக அரசின் பல்வேறு குழப்பமான செயல்பாடுகளால் மக்களும் ஏற்கனவே அதிருப்தியில்தான் உள்ளனர். அதை நாம் பயன்படுத்திக் கொள்வோம். அதுவே நமக்கு தேவையான ஆதரவை இழுத்துக் கொண்டு வந்து விடும்.


தென் மாவட்டங்களில் நமது நிலை மோசமாக இல்லை. கண்டிப்பாக அங்கும் நமக்கு சாதகமான சூழல்தான் உள்ளது. பாஜகவை விரும்பாத, அதேசமயம், திமுகவையும் விரும்பாதவர்கள் ஆதரவு நிச்சயம் அதிமுகவுக்கே வந்து சேரும் என்று எடப்பாடியார் நம்பிக்கையுடன் உள்ளாராம்.


கடந்த லோக்சபா தேர்தலில் தேனியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. அதற்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்ததும், சிஏஏ சட்டம் உள்ளிட்டவற்றில் அதிமுகவின் நிலைப்பாடுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முறை பாஜக நம்முடன் இல்லை, சிஏஏ சட்டத்திற்கு நாம் கொடுத்த ஆதரவுக்கு பாஜக தந்த அழுத்தமே காரணம் என்பதையும் நாம் விளக்கி விட்டோம்.. இஸ்லாமிய மக்களும் நம்மை நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார்கள். நம்முடன் எஸ்டிபிஐ உடன் இருக்கிறது. இது மிகப் பெரிய பலம். எனவே கடந்த முறை இருந்த நிலை இப்போது இருக்காது.. எனவே கண்டிப்பாக நிச்சயம் நமது வெற்றி இந்த முறை பிரகாசமாக இருக்கும் என்று அதிமுக தரப்பு உறுதியாக நம்புகிறதாம்.


அப்படியானால் அந்த 7 தொகுதிகள் எவை?




2019 லோக்சபா தேர்தலில் அதிமுக 20 தொகுதிகளில்தான் போட்டியிட்டது. இந்த முறையும் அதேபோல போட்டியிடலாம் அல்லது கூடுதலான தொகுதிகளில் போட்டியிடவும் வாய்ப்புள்ளது. அதிக அளவில் மேற்கு மண்டலத்தில் அதிமுக போட்டியிட வாய்ப்புண்டு.


மேற்கு மண்டலத்தைப் பொறுத்தவரை அது அதிமுகவின் கோட்டையாகும்.  தொடர்ந்து கண்ணை மூடிக் கொண்டு அங்குள்ளவர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள். எம்ஜிஆர் காலத்தில் உருவான விசுவாசம் அது. இந்த முறை தங்களுடன் பாஜக இல்லாததால், கடந்த முறை மிஸ்ஸான வாக்குகளும் இப்போது வந்து சேரும் என்பது எடப்பாடியாரின் கணக்கு.


அந்த வகையில் பார்க்கப் போனால்,  இந்த முறை எடப்பாடியார் வெற்றிவாய்ப்பை எதிர்பார்க்கும் தொகுதிகள் - திருப்பூர்,  கோயம்புத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், கிருஷ்ணகிரி, சிதம்பரம் (தனி), , தென் சென்னை, காஞ்சிபுரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டனம், தேனி (போட்டியிட்டால்),  திருநெல்வேலி.  இதில் கண்டிப்பாக 7 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்பது எடப்பாடி பழனிச்சாமி போட்டுள்ள கணக்கு. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.


இறங்கிப் போக வேண்டாம்.. இறங்கி அடிப்போம்




இரட்டை இலை சின்னம், பாஜக கூட்டணியில் இல்லாதது, திமுக அரசு மீதான மக்களின் அதிருப்தி, ஏகோபித்த தலைமையாக தான் வலுவாக இருப்பது அதிமுகவுக்குள் தனது செல்வாக்கு அதிகரித்திருப்பது, இஸ்லாமியர்களை சமாதானப்படுத்தி விட்டது.. என்று பல்வேறு கணக்குகள், காரணங்களால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளதாம் அதிமுக தலைமை.


இதனால்தான் யாரிடமும் இறங்கிப் போக வேண்டாம்.. மாறாக இறங்கி அடிப்போம்.. உறுதியாக இந்த முறையை வெற்றிக் கோப்பையைக் கைப்பிடிப்போம் என்ற அசாத்திய நம்பிக்கையில் அதிமுக தலைவர்கள் உள்ளனராம்.