அமேதியில் "மீண்டும் நேருக்கு நேர்".. ராகுல் காந்தியின் யாத்திரைக்கு இப்படியா சோதனை வரணும்?

Aadmika
Feb 19, 2024,04:13 PM IST

டில்லி : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்திர பிரதேசத்தில் பாரத் ஜோதா நியாய யாத்திரையை நடத்தி வருகிறார். இந்த யாத்திரை உ.பி.,யில் நுழைந்தது முதல் திணுசு திணுசாக காங்கிரஸ் சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டிருக்கிறது. 


பல திசைகளிலும் நெருக்கடி இருப்பதால் இதை எப்படி ராகுல் காந்தி சமாளித்து, யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்ய போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தி வெற்றி பெற்று விட்டால், மக்களிடம் அவரது செல்வாக்கும் கொஞ்சம் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.




லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பானக.,விற்கு எதிராக பாரத் ஜேதா நியாய யாத்திரையை காங்கிரஸ் நடத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் இந்த யாத்திரை உத்திர பிரதேசத்திற்குள் நுழைந்து விட்டது. வட மாநிலங்களை பொறுத்தவரை மத்தியில் ஆளும் அல்லது ஆளப் போகும் கட்சி எது என்பதையும், அந்த கட்சியின் செல்வாக்கு என்ன என்பதையும் நிரூபிக்கும் மாநிலமாக இருப்பது உத்திர பிரதேசம் தான். இங்கு தான் நாட்டிலேயே அதிகபட்சமாக 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அது மட்டுமின்றி ஸ்டார் வேட்பாளர்கள் அதிகம் போட்டியிடும் மாநிலமும் இது தான். இந்த மாநிலத்தில் பலம் வாய்ந்த கட்சியாக சமாஜ்வாதி இருந்தாலும் எப்போதுமே காங்கிரஸ் - பாஜக இடையே கடும் மோதல் இருந்து கொண்டே இருக்கும்.


கொளுத்திப் போட்ட பாஜக


கடந்த வாரம் ராகுல் காந்தி, உ.பி.,யில் யாத்திரையை துவங்கிய போது அவரது சகோதரியும், காங்கிரசின் உ.பி., மாநில பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி அவரை வரவேற்கவோ, யாத்திரையில் பங்கேற்கவோ வரவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், தனது சகோதருக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து மட்டும் தெரிவித்திருந்தார். இதனால் ராகுல் காந்திக்கும் - பிரியங்கா காந்திக்கும் கருத்து வேறுபாடு. வரும் லோக்சபா தேர்தலில் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டு தேர்தல் அரசியலிலும் அடியெடுத்து வைக்க உள்ளது ராகுல் காந்திக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் பிரியங்காவும் ராகுலை புறக்கப்பதாகவும் கொளுத்தி போட்டது பாஜக. ஆனால் இதற்கு இதுவரை காங்கிரஸ் தரப்பில் எந்த எதிர்ப்போ, விளக்கமோ தெரிவிக்கவில்லை. இதனால் பாஜக சொல்வது போல் ராகுல் - பிரியங்கா இடையே நிஜமாகவே கருத்து வேறுபாடு தானோ என பலரும் கேட்டு வருகிறார்கள்.




இது ஒரு புறம் என்றால் மற்றொரு புறம், இந்தியா கூட்டணியில் இருக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மற்றும் தங்கள் கட்சி இடையேயான லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ஒரு முடிவுக்கு வந்தால் தான் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்பேன் என திட்டவட்டமாக கூறி வருகிறார். ஏற்கனவே இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி வருகின்றன. யாத்திரையில் பங்கேற்க பிரியங்காவும் வராத நிலையில் கூட்டணி கட்சி தலைவரான அகிலேசும் கலந்து கொள்ளவில்லை என்றால் அது காங்கிரசிற்கு பெரும் பின்னடைவாகி விடும். கூட்டணியிலும் நெருக்கடி, சொந்த கட்சியிலும் நெருக்கடி என்ற நிலை ராகுல் காந்திக்கு.


அமேதியில் கேம்ப் அடிக்கும் ஸ்மிருதி இராணி




இருக்க நெருக்கடி போதாது என்று, ராகுல் காந்தி யாத்திரை சென்று, கூட்டம் போடும் அதே நாளில் தான் அமேதி தொகுதியில் 4 நாள் சுற்று பயணத்தையும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நடத்துகிறார். 15 வருடங்களாக அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தான் எம்.பி.,யாக இருந்து வந்தார். காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட அமேதி தொகுதியில் 2019ம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிருதி இராணி, ராகுல் காந்தியை தோற்கடித்து எம்.பி., ஆனார். 


அது மட்டுமா? 2019 ம் தேர்தலின் போதே அடுத்த தேர்தலுக்குள் அமேதி தொகுதியில் ஒரு வீடு கட்டி  குடியேறி, உங்களில் ஒருத்தியாக மாற போகிறேன் என சொல்லி இருந்தார். அதே போல் இப்போது ஒரு வீட்டையும் கட்டி முடித்து, பிப்ரவரி 22ம் தேதி அந்த வீட்டின் புதுமனை புகுவிழாவையும் தொகுதி மக்களின் வீட்டு விழாவாக நடத்த போகிறார். 2022ம் ஆண்டு உ.பி., சட்டசபை தேர்தலுக்கு பிறகு தற்போது தான் ஒரே நேரத்தில் ஸ்மிருதி இராணி, ராகுல் காந்தி இருவரும் அமேதியில் மோதிக் கொள்ள போகிறார்கள்.


இப்போது அமேதி மக்கள் ஸ்மிருதி இராணி நடத்தும் விழாவில் பங்கேற்க போகிறார்களா? அல்லது ராகுல் காந்தி நடத்தும் கூட்டத்திற்கு வரப் போகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மற்றொரு புறம் இந்த முறை லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி, மீண்டும்  இழந்த தனது செல்வாக்கை காட்ட அமேதியில் போட்டியிட போகிறாரா? அல்லது இந்த முறையும் வயநாட்டில் போட்டியிட்டு மீண்டும் எம்.பி.,யாக போகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.