ஈரோட்டை திமுகவிடம் கொடுத்து விட்டு.. திருச்சியைப் பெற்றது மதிமுக.. துரை வைகோ போட்டி?

Meenakshi
Mar 18, 2024,08:10 PM IST

சென்னை:  திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மதிமுக நிறுவனர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.


2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எஸ். திருநாவுக்கரசர் போட்டியிட்டு பிரமாண்ட வெற்றி பெற்றிருந்தார். சென்ற முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற அந்த தொகுதி தற்போது மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற முறை மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிட்டது. அந்தத் தொகுதியை திமுக எடுத்துக் கொண்டுள்ளது.




திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 மக்களவை தொகுதியும், புதுவையில் ஒரு மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது. 2024ம் ஆண்டு லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சி திருச்சி தொகுதியை விட்டுக்கொடுத்து விட்டு மயிலாடுதுறையை பெற்றுள்ளது.  மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் மற்றும் வைகோவும் கையெழுத்திட்டுள்ளனர். 


திருச்சியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துரை வைகோவை வெற்றி பெற வைப்பது எங்களது பொறுப்பு என்று ஏற்கனவே திருச்சி திமுக தலைவர்கள் தலைமைக்கு உத்தரவாதம் கொடுத்து விட்டனராம். எனவே திருச்சி தொகுதி புதிய எம்.பியை வரவேற்க தயாராகி வருகிறது.