ராகுல் காந்திக்கு பாஜக வைத்த அதிரடி "செக்".. கோட்டையை மீண்டும் கைப்பற்றுமா காங்கிரஸ்?
டில்லி : லோக்சபா தேர்தலுக்காக வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறேன் என்கிற பெயரில் மறைமுகமாக காங்கிரஸ் கட்சிக்கு பல "செக்" களை வைத்துள்ளது பாஜக. அதில் ஒன்று தான் அமேதி தொகுதியில் போட்டியிட இந்த முறையும் ஸ்மிருதி இராணிக்கே சீட் கொடுத்தது.
2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் பல்வேறு மாநிலங்களில் போட்டியிடும் 195 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று (மார்ச் 02) வெளியிட்டது. இதில் மோடி வாரணாசி தொகுதியிலும், அமித்ஷா காந்திநகரிலும், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இராணி மீண்டும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. தனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்காக எக்ஸ் தள பக்கத்தில் ஸ்மிருதி இராணி, கட்சி நிர்வாகிகள் அமித்ஷா, மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டிருந்தார்.
காங்கிரஸ் என்ன செய்ய போகிறது?
இப்போது காங்கிரஸ் என்ன செய்ய போகிறது? குறிப்பாக ராகுல் காந்தி என்ன செய்ய போகிறார்? 1967ம் ஆண்டு முதல் காங்கிரசின் கோட்டையாக இருப்பது உ.பி.,யில் உள்ள ரோபரேலி மற்றும் அமேதி தொகுதிகள். அமேதி தொகுதியில் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு பிறகு ராகுல் காந்தி எம்.பி.,யாக இருந்தார். 2004ம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தான் இந்த தொகுதியின் எம்.பி.,யாக இருந்து வந்தார். ஆனால் 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஸ்மிருதி இராணி நிறுத்தப்பட்டார். இதில் 55,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை தோற்கடித்து, காங்கிரசின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியை கைப்பற்றி, எம்.பியானார்.
கடந்த தேர்தலில் போது,தனக்கு அமேதியில் வீடு இல்லாததால் டில்லியில் இருப்பதாகவும். விரைவில் அமேதியில் வீடு கட்டு, இந்த தொகுதியில் ஒருத்தியாக மாறுவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படியே சமீபத்தில் அமேதியில் வீடு ஒன்றை கட்டி முடித்து, கிரஹ பிரவேசமும் செய்து முடித்து விட்டார். இதனால் அவரது செல்வாக்கு அமேதி தொகுதியில் இன்னும் அதிகரிக்கவே செய்துள்ளது.
ஏற்கனவே ரேபரேலி தொகுதியில் போட்டியிடாமல் விலகி ராஜ்யசபாவிற்கு வேட்புமனு தாக்கல் செய்து விட்டார் சோனியா காந்தி. ரேபரேலியில் அவருக்கு பதிலாக பிரியங்கா காந்தி போட்டியிட போவதாக சொல்லப்படுகிறது. அவரை தொகுதி மக்கள் எப்படி ஏற்பார்கள் என தெரியவில்லை. இந்த நிலையில் இந்த முறை ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. குடும்ப தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என அமேதியில் மீண்டும் போட்டியிட்டால் ஸ்மிருதி இராணியை எதிர்த்து ஓட்டு வாங்க முடியுமா? என தெரியவில்லை.
காங்கிரஸ் பிளான் என்னவாக இருக்கும்?
எப்படியாவது மீண்டும் எம்.பி.,யானால் போதும் என நினைத்து இந்த முறை வயநாட்டிலேயே போட்டியிட்டால் அமேதி தொகுதியை இனி காங்கிரஸ் மறந்து விட வேண்டியது தான். இனி அதை காங்கிரசின் கோட்டை என சொல்லிக் கொள்ள முடியாது. சோனியா காந்தியும் போட்டியிடாமல், ராகுல் காந்தியும் வடக்கில் போட்டியிடாமல் தெற்கில் போட்டியிட்டால் வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கொஞ்ச நஞ்சம் இருக்கும் செல்வாக்கும் போய் விடும்.
இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் காங்கிரசையும், ராகுல் காந்தியை நிறுத்தி விட்டது பாஜக. இதில் இருந்து மீண்டு, ராகுல் காந்தி என்ன முடிவு எடுத்து கட்சியின் பெயரையும், தன்னுடைய செல்வாக்கை காப்பாற்றி எந்த தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யாக போகிறார் என்று தான் தெரியவில்லை.