2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்.. தருண் கோகோய், அசோக் கெலாட், கமல்நாத் மகன்களுக்கு சீட்
டெல்லி: காங்கிரஸ் கட்சி 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 43 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில் 3 மூத்த முக்கியத் தலைவர்களின் மகன்களுக்கு சீட் தரப்பட்டுள்ளது.
அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், முன்னாள் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோயின் மகன் கெளரவ் கோகோய், முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் ஆகியோருக்கு காங்கிரஸ் மேலிடம் சீட் கொடுத்துள்ளது.
அஸ்ஸாம், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநிலங்கள் மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசத்துக்கான வேட்பாளர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அஸ்ஸாமில் 12 வேட்பாளர்களும், குஜராத்தில் 7 வேட்பாளர்களும், மத்தியப் பிரதேசத்தில் 10, ராஜஸ்தான் 10, உத்தரகாண்ட் 3 மற்றும் டாமன் டையூவுக்கு ஒரு வேட்பாளர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
43 பேரில் 10 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 33 பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். 25 பேர் 50 வயதுக்கு உட்பட்டோர், 8 பேர் 51 முதல் 60 வயதுக்குட்பட்டோர். 10 பேர் 61 முதல் 70 வயதுக்குட்பட்ட வேட்பாளர்கள் ஆவர்.
மொத்த வேட்பாளர்களில் 76.7 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.