அகற்றப்படும் அரசியல் தலைவர் படங்கள்.. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன!
Mar 16, 2024,05:51 PM IST
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
லோக்சபா தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டமான ஏப்ரல் 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. புதுச்சேரிக்கும் இதே நாளில்தான் தேர்தல் நடைபெறுகிறது. விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலு் ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப் பதிவு நடைபெறும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசியல் தலைவர்களின் படங்கள், போஸ்டர்கள், டிஜிட்டல் போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இந்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையர் பேட்டி: முன்னதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தனது பேட்டியின்போது கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு
2019 தேர்தலை விட 6% அதிக வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கவுள்ளனர். சுமார் 20 கோடி இளம் வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 100 வயதை கடந்த 2.18 லட்சம் பேர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.8 கோடி முதல் முறை வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலில் பங்கேற்க உள்ளனர்.
முதல் தலைமுறை வாக்காளர்களில் 85 .3 லட்சம் பேர் பெண்கள் ஆவர். வாக்காளர் பட்டியலில் சேர இன்றைய தலைமுறையினர் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.12 மாநிலங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
அமைதியான பிரச்சாரம் உறுதி செய்யப்படும்: தேர்தல் பிரச்சாரம் அமைதியாகவும், வன்முறை இன்றியும் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்படும். தேர்தல் ஆணையர்கள் உட்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால் வதந்தி பரப்ப கூடாது. நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் வெறுப்பு பேச்சுகளை தவிர்க்க வேண்டும். சாதி, மத அடிப்படையில் வாக்கு சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். தன்னார்வலர்கள், ஒப்பந்த பணியாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் எந்த பாரபட்சமும் கூடாது. அண்மையில் நடந்து முடிந்த 11 சட்டமன்ற தேர்தலில் 34 கோடி பணப் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தலின் போது சட்டவிரோத பணப்பரிமாற்றங்கள் செய்யவது ஐந்தாண்டுகளில் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது.
2100 தேர்தல் பார்வையாளர்கள்: நாடு முழுவதும் மொத்தம் 2100 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மக்களவைத் தேர்தலில் பிளாஸ்டிக் காகித பயன்பாடு குறைக்கப்படும். ஆள் பலம், பணபலம், வதந்தி நடத்தை விதிமுறை ஆகிய நாலும் சவாலாக உள்ளன. வாக்குச்சாவடிகளின் நடைபெறும் வாக்குப்பதிவு இணைய வழியாக நேரலை செய்யப்படும். எல்லைகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். தேசிய, மாநில மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும்.
பொய்ச் செய்திகளை பரப்பக் கூடாது: அரசியல் கட்சியினர் சமூக தள வலைதளங்களில் பொறுப்பற்ற செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும். தவறான செய்திகளை யாரும் பரப்ப கூடாது. சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பொதுமக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
வாக்குப் பதிவின்போது ஆள் மாறாட்டம், பிரச்சாரத்தின்போது பண பலத்தை பயன்படுத்துவது, உள்ளிட்டவற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள்: அனைத்து விதமான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படும். விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் என அனைத்து போக்குவரத்தும் கண்காணிக்கப்படும். வாக்காளர்களைக் கவருவதற்காக பொருட்களைக் கொடுப்பதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.