15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜக கூட்டணியில் நவீன் பட்நாயக்.. "400 சீட்" ரகசியம் இது தானா?
டில்லி : கிட்டதட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக கூட்டணியில் மீண்டும் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் பாஜக.,வின் பலம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
பிரதமர் மோடி மார்ச் 05ம் தேதியன்று ஒடிசா சென்று வந்த பிறகு பாஜக மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகள் டில்லியிலும் புவனேஸ்வரிலும் பலமுறை கலந்து ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. இந்த இரு கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி உருவாக உள்ளதாகவும், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் நவீன் பட்நாயக் இணையவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இரு கட்சிகள் இடையே 15 ஆண்டுகளாக இருந்த மனக்கசப்பு நீங்க உள்ளது.
பாஜக - பிஜூ ஜனதா தளம் கட்சிகள் 1998 ம் ஆண்டு முதல் 2009 வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தன. தற்போது ஒடிசா முதல்வராக இருக்கும் நவீன் பட்நாயக், வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். பல்வேறு காரணங்களால் இரு கட்சிகளும் பிரிந்திருந்த நிலையில், லோக்சபா தேர்தல் நெருங்க உள்ள நிலையில் மீண்டும் கூட்டணி உருவாகுமா என இரு கட்சி தொண்டர்களும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக பிஜூ ஜனதா தளம் துணை தலைவர் தேபி பிரசாந்த் மிஷ்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒடிசா மக்களின் நலனையும், புதிய திட்டங்கள், வளர்ச்சி ஆகியவற்றையும் மனதில் கொண்டு பிஜூ ஜனதா தளம் எந்த முடிவு எடுத்தாலும் அதை சிறப்பானதாக எடுக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் பாஜக- பிஜூ ஜனதா தளம் இடையேயான கூட்டணி கிட்டதட்ட இறுதியாகி விட்டதாக தெரிகிறது.
கூட்டணி முடிவு செய்யப்பட்டு, தற்போது இரு கட்சிகளிடையே மிக முக்கியமான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். நடப்பு லோக்சபாவில் ஒடிசாவில் இருந்து பாஜக.,விற்கு 8 உறுப்பினர்களும், பிஜூ ஜனதா தளத்திற்கு 12 உறுப்பினர்களும் உள்ளனர். அதே போல் மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 147 தொகுதிகளில் பிஜூ ஜனதா தளம் 112 உறுப்பினர்களையும், பாஜக 23 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. தற்போது கூட்டணி உருவாக உள்ளதால் லோக்சபா மற்றும் சட்டசபை இரண்டிலும் எந்த கட்சிக்கு எத்தனை சீட்டுகள் என்ற பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறதாம்.
ஒடிஷாவில் எம்ஜிஆர் பார்முலா
தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கடைப்பிடித்த பார்முலாவை நவீன் பட்நாயக் கடைப்பிடிக்கவுள்ளதாக சொல்கிறார்கள். அதாவது காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தபோது லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுப்பார் எம்ஜிஆர். அதேசமயம், சட்டசபைத் தேர்தலில் அதிமுக அதிக தொகுதிகளில் போட்டியிடும். அதே பாணியில் பாஜகவுக்கு அதிக லோக்சபா தொகுதிகளைக் கொடுத்து விட்டு, சட்டசபையில் தனது கட்சி அதிக இடங்களில் போட்டியிடும் வகையில் நவீன் பட்நாயக் திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
பிப்ரவரி மாதத்திலேயே சம்பல்பூரில் நடந்த விழாவில் பிரதமர் மோடியும், நவீன் பட்நாயக்கும் ஒரே மேடையில் தோன்றி போதே இரு கட்சிகள் இடையே கூட்டணி உருவாக உள்ளதாக பேச்சுக்கள் எழுந்தன. அந்த விழாவில் நவீன் பட்நாயக்கும் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளதை புகழ்ந்து பேசி இருந்தார். இதனால் எப்படியும் நவீன் பட்நாயக், பாஜக கூட்டணிக்கு திரும்புவார் என உறுதியாக தெரிந்ததால் தான் பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் 400 சீட்கள் கன்ஃபார்ம் என அடித்து சொல்லி வந்துள்ளனர் போல.