திரினமூல் காங்கிரஸைத் தொடர்ந்து.. ஆம் ஆத்மியும் அதிர்ச்சி.. "பஞ்சாபில் தனித்துப் போட்டியாம்"!
சண்டிகர்: திரினமூல் காங்கிரஸ், மேற்கு வங்காளத்தில் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்த சில மணி நேரங்களிலேயே பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்து இன்னும் அதிர்ச்சியைக் கூட்டியுள்ளார்.
காலையில்தான் எழுதியிருந்தோம்.. இந்தியா கூட்டணியில் பெரும் சிக்கலான கட்சிகளாக மமதாவின் திரினமூல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாடிக் கட்சிகள் திகழ்கின்றன என்று. இதில் சமாஜ்வாடியைக் கூட ஒரு கணக்கில் சேர்த்து விடலாம்.. ஆனால் திரினமூல் மற்றும் ஆத் ஆத்மியை எதிலும் சேர்க்க முடியாது.. தாங்கள் பிடித்த முயலுக்கு மூனே கால் என்று பிடிவாதமாக இருக்கக் கூடியவர்கள் இவர்கள்.
காலையில்தான் மேற்கு வங்காளத்தில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்று மமதா பானர்ஜி அறிவித்து இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் பிற்பகலில் ஆம் ஆத்மி கட்சி தன் பங்குக்கு இன்னொரு இடியை இறக்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட்டு பாஜகவை வீழ்த்தும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியுள்ளார். கடந்த ஆண்டு இங்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது நினைவிருக்கலாம். பகவந்த் மான் முதல்வராக இருந்து வருகிறார்.
சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால், அந்த தெம்பில் லோக்சபா தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் ஆம் ஆத்மி கட்சி இருந்து வருகிறது. இதனால்தான் அது காங்கிரஸைக் கண்டு கொள்ள விரும்பவில்லை. இருப்பினும் இந்தியா கூட்டணியிலும் அது நீடித்து வருகிறது. பாஜக அவ்வப்போது டெல்லி ஆட்சிக்கு குடைச்சல் கொடுத்து வருவதால் நமக்கும் குரல் கொடுக்க யாராவது வேண்டும் என்பதற்காகவே இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி நீடிப்பதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று கூறுகையில், பஞ்சாபில் உள்ள 13 லோக்சபா தொகுதிகளின் வேட்பாளர்களைத் தேரவு செய்ய 40 பேரின் பெயர்கள் வடிகட்டப்பட்டுள்ளன. வேட்பாளர்களை இறுதி செய்யும் முன்பு அவர்கள் குறித்த அனைத்து விவரங்களும் சரி பார்க்கப்படும். அதன் பிறகு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள் என்றார்.
ஆம் ஆத்மியின் இந்த கருத்து காங்கிரஸ் வட்டாரத்தை மேலும் குழப்பமாக்கியுள்ளது. திரினமூல் கட்சியைத் தொடர்ந்து தற்போது ஆம் ஆத்மியும் குச்சியைக் கொடுப்பதால் இந்தியா கூட்டணிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்படியே ஒவ்வொருவராக பிய்த்துக் கொண்டு போனால் எப்படி என்ற சலிப்பும் தலைவர்களிடையே ஏற்படுள்ளது.
வலுவாக உள்ள பிராந்திய கட்சிகளை அவர்களது மாநிலங்களில் பெரும்பான்மையாக போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்பதே மமதா பானர்ஜியின் கோரிக்கை. அது தவிர பிற மாநிலங்களில் கூட்டணியாக போட்டியிடலாம். அந்தப் பகுதிகளில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் கூட போட்டியிட்டுக் கொள்ளட்டும் என்றும் அவர் கூறி வருகிறார். ஆனால் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் சமமான முறையில் தொகுதிகளைப் பங்கிடலாம் என்று காங்கிரஸ் கூறி வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியும் கூட அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. இதை சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, திரினமூல் காங்கிரஸ் கட்சிகள் விரும்பவில்லை. இதனால்தான் சிக்கல் எழுந்துள்ளது.
அடுத்து யார் அதிரடியான அறிவிப்பை வெளியிடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.