தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓய்ந்தது.. அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்.. 19ம் தேதி மக்களவைத் தேர்தல்!

Manjula Devi
Apr 17, 2024,06:45 PM IST
சென்னை:  தமிழ்நாடு, புதுச்சேரி மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுதினம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே நேரத்தில் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலும் நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாட்டில்  திமுக,அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

திமுகவை பொறுத்தவரை, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய  செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரித்தனர்.

அதிமுகவை பொருத்தவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணிக் கட்சிகளான தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், உள்ளிட்டோரும் தொகுதி வாரியாக சென்று அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



பாஜகவை பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய தலைவர் ஜேபி நாட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்துள்ளனர்.

கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 39 தொகுதிகளுக்கும் சென்று சூறாவளி பிரச்சனை மேற்கொண்டு அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது. இனி எந்த வகையான பிரச்சாரமும் செய்யக் கூடாது. மீறி பிரச்சாரம் செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. நாளை ஓய்வு நாளாகும். நாளை மறு நாள் வாக்குப் பதிவு நடைபெறும். ஜூன் 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படும்.