திமுக -காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு...இன்று மாலை 6 மணிக்கு கையெழுத்தாகிறது

Manjula Devi
Mar 09, 2024,11:23 AM IST

சென்னை:லோக்சபா தேர்தல் தொடர்பாக திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்று மாலை 6 மணிக்கு கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன. இதற்கான எதிர்பார்ப்புடன் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றனர். மறு பக்கம் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்  பாதுகாப்பு குறித்த முன்னேற்பாடுகளில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 




திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிபிஐ, சிபிஎம், கொங்கு தேசிய மக்கள் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் சிபிஎம்,விசிக மற்றும் கொங்கு தேசிய மக்கள் கட்சிக்கு ஏற்கனவே தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு முடிவுகள் இறுதியானது. இது தவிர மதிமுக வுக்கு ஒரு தொகுதி ஒப்பந்தமாகி கையெழுத்தானது.  இதனைத் தொடர்ந்து திமுக காங்கிரஸ் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தையில்  காங்கிரஸ், திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தி வந்ததாகவும்,திமுக இதனை ஏற்க மறுத்ததால் தொகுதி உடன்பாடில் இழுபறி நீடித்து வந்ததாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில் திமுக- காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடைபெறுகிறது. இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு உடன்பாடு இறுதியாகி, ஒப்பந்தம் கையெழுத்தாகும் என  தகவல் வெளியாகி உள்ளது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் மூத்த நிர்வாகி கே.சி வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.