லோக்சபா தேர்தல் 2024 : 96 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது
டெல்லி: 4ம் கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு 96 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிகிறது. இத்தொகுதிகளில் வருகின்ற 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், 4ம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 13ம் தேதி நடைபெற உள்ளது. அதன் பின்னர் மீதமுள்ள 3 கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 20,25 மற்றும் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ளன. அனைத்து கட்ட வாக்குப்பதிவும் முடிந்து ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் 4ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 96 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகின்றது. ஆந்திராவில் 25 தொகுதிகள், மகாராஷ்டிாவில் 11 தொகுதிகள்,ஒடிசாவில் 4 தொகுதிகள், உத்திரப்பிரதேசத்தில் 13 தொகுதிகள்,பீகாரில் 5 தொகுதிகள், ஜார்க்கண்ட்டில் 4 தொகுதிகள் உள்ளிட்ட 96 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 4ம் கட்ட தேர்தல் நடைபெறும் 96 தொகுதிகளிலும், மொத்தம் 4,264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நாளை மறு நாள் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.தேர்தல் ஆணையமும் தீவிரமாக பணிகளை செய்து வருகிறது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல முக்கிய வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.