Loksabha Constituency Roundup: வட சென்னை யாருக்கு.. மீண்டும் திமுகவா.. அல்லது புது எம்.பியா?

Su.tha Arivalagan
Mar 06, 2024,06:00 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் 2வது மக்களவைத் தொகுதி என்ற பெருமை கொண்ட வட  சென்னை பாரம்பரியாக திமுகவுக்கே அதிகமாக வாக்களித்த தொகுதி.. அதேசமயம், அதிக அளவில் மக்கள் பிரச்சினைகளைக் கொண்ட தொகுதியும் இதுதான்.


சென்னை மாநகரின் வட பகுதிகளை உள்ளடக்கிய வட சென்னை மக்களவைத் தொகுதியில், ராயபுரம், கொளத்தூர், திருவிக நகர் (தனி), பெரம்பூர், திருவொற்றியூர் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் அடங்கியுள்ளன.


திமுகவின் கோட்டை




1957ல் நடந்த முதல் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அந்தோணிப் பிள்ளை வென்றார். 1962ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.  அதன் பிறகு நிலைமை மாறியது. 1967ல் இந்தத் தொகுதி திமுக வசம் வந்தது. இதற்கு முக்கியக் காரணம் இத்தொகுதியில் பெருமளவில் உள்ள தொழிலாளர்களின் வாக்குகளை திமுக தன் வசம் ஈர்த்ததே. வட சென்னையின் முதல் திமுக எம்.பி. என்ற பெருமை நாஞ்சில் கி. மனோகரனுக்குக் கிடைத்தது. தொடர்ந்து 2 முறை வட சென்னை எம்.பியாக அவர் இருந்தார்.


1977 தேர்தலில்  அதிமுகவுக்குத் தாவிய நாஞ்சில் மனோகரன், அதிமுக சார்பில் இங்கு போட்டியிட்டு, திமுக வேட்பாளர் ஏ.வி.பி.ஆசைத்தம்பியிடம் தோல்வியைத் தழுவினார்.  1989ம் ஆண்டு வரை தொகுதி திமுக வசம் இருந்தது. 89 தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்தத் தொகுதி மாற ஆரம்பித்தது. 1989 தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் வெற்றி பெற்றார். 1991 தேர்தலிலும் இவரே வென்றார்.


1996ல் திமுகவின் என்.வி.என். சோமு வெற்றி பெற்றார். 98 முதல் 2009 வரை இத்தொகுதியை திமுகவின் செ. குப்புசாமி வைத்திருந்தார். இடையில் 2014ல் மட்டும் இத்தொகுதி அதிமுகவின் டி.ஜி.வெங்கடேஷ்பாபு வசம் போனது. கடந்த 2019 தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் டாக்டர் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றார். 


2019 லோக்சபா தேர்தல் முடிவுகள்




டாக்டர் கலாநிதி வீராசாமி (திமுக) - 5,90,986

ஆர். மோகன் ராஜ் (தேமுதிக)  - 1,29,468

ஏஜி.மவுரியா (மக்கள் நீதி மய்யம்) - 1,03,167

காளியம்மாள் (நாம் தமிழர் கட்சி) - 60,515

சந்தனகிருஷ்ணன் (அமமுக) - 33,277


4 லட்சத்து 61 ஆயிரத்து 518 வாக்குகள் வித்தியாசத்தில் இத்தேர்தலில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றார். இவர் முதல் முறை எம்.பி. ஆவார்.


11 முறை திமுக வெற்றி


வட சென்னையைப் பொறுத்தவரை அதிக அளவில் திமுக 11 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக சார்பில் செ. குப்புசாமி 3 முறை எம்.பியாக இருந்துள்ளார். 2009ம் ஆண்டு இங்கு தொகுதி மறு சீரமைப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு நடந்த 3 மக்களவைத் தேர்தல்களில் 2ல் திமுகதான் வென்றுள்ளது. ஒன்றில் அதிமுக வென்றது.


மிகப் பெரிய தொழிற்சாலைகள் முதல் சாதாரண கடைகள் வரை தொழில் நகரமாக விளங்குகிறது வட சென்னை. தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ள தொகுதி இது. இவர்களுக்கு அடுத்து மீனவர்கள் அதிகம் உள்ளனர். பட்டியல் இன மக்களும் இங்கு அதிகம் உள்ளனர். சமூகம் என்று பார்த்தால் தென் மாவட்டங்களிலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்து செட்டிலாகி, வட சென்னையின் அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கியக் காரணமான நாடார் சமுதாய மக்கள் அதிகம் உள்ளனர். தெலுங்கு பேசும் மக்களும் கணிசமாக உள்ளனர். 


வட சென்னையின் பிரச்சினைகள்




வட சென்னை என்று சொன்னதுமே முதலில்  போக்குவரத்து நெரிசலும், குறுகலான சாலைகளும், அதிக மக்கள் தொகை காரணமாக காணப்படும் நெருக்கடிகளும்தான் நினைவுக்கு வரும். சரியான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இங்கு இல்லை. தொழிற்கட்டமைப்புகள் நிறைய இருந்தாலும் கூட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மோசமாகவே உள்ளன.


பல்வேறு பிரச்சினைகளுடன்தான் தொடர்ந்து வட சென்னை இருந்து வருகிறது. வருகிற தேர்தலிலும் திமுக சார்பில் கலாநிதி வீராசாமியே போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவருக்கு மக்கள் அளிக்கப் போகும் தீர்ப்பு எப்படி இருக்கும்.. தேர்தல் முடிவில் தெரிய வரும். காத்திருப்போம்.