Loksabha Constituency Roundup: அரக்கோணத்தில்.. திமுகவுக்கு மீண்டும் அடிக்குமா அதிர்ஷ்டம்?

Su.tha Arivalagan
Feb 29, 2024,07:23 PM IST

சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு தொகுதியிலும் யாரெல்லாம் மீண்டும் வெல்லப் போகிறார்கள்.. யாருக்கெல்லாம் ஆதரவு அப்படியே இருக்கிறது.. யாருக்கெல்லாம் புதிதாக வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. புதுச்சேரியில் ஒரு  தொகுதி உள்ளது. இந்தத் தொகுதிகளை ஒவ்வொன்றாக திரும்பிப் பார்க்கலாம். முதலில் அரக்கோணம் தொகுதியை இன்று பார்ப்போம்.




அரக்கோணம்... தமிழ்நாட்டின் 7வது லோக்சபா தொகுதியாகும். இந்தத் தொகுதியில் மொத்தம் 6 சட்டசபைத் தொகுதிகள்  இடம் பெற்றுள்ளன. அதாவது - திருத்தணி, அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகியவையே அவை.


மொத்தம் உள்ள 6 சட்டசபைத் தொகுதிகளில் காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, திருத்தணி ஆகிய தொகுதிகள் திமுக வசம் உள்ளது. அரக்கோணம் (தனி) அதிமுகவிடமும், சோளிங்கர் தொகுதி காங்கிரஸிடமும் உள்ளது. 


அரக்கோணத்தின் முதல் எம்.பி. ஓ.வி. அழகேச முதலியார்




1967 முதல் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி இருந்து வருகிறது. ஆனால் அப்போது அந்தத் தொகுதியின் பெயர் திருத்தணி. அங்கு நடந்த முதல் தேர்தலில் வென்றவர் திமுகவைச் சேர்ந்த எஸ்.கே.சம்பந்தன். அதன் பின்னர் தொகுதியின் பெயர் அரக்கோணமாக மாறியது. அதைத் தொடர்ந்து 1971,  1977 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓ.வி.அழகேச முதலியார் வெற்றி பெற்றார். 1980, 84 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் ஏ.எம்.வேலு முதலியார் வெற்றி பெற்றார். 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வென்றது. அக்கட்சி சார்பில் ஆர். ஜீவரத்தினம் வெற்றி பெற்றார். 


1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஏ.எம்.வேலு முதலியார் வெற்றி பெற்றார். 1998 முதல் இந்தத் தொகுதி திராவிடக் கட்சிகள் வசம் மாறியது.  1998ல் அதிமுகவின் கோபால் நாயக்கர், 1999ல் திமுகவின் ஜெகத்ரட்சகன், 2004ல் பாமகவின் ஆர். வேலு, 2009ல் மீண்டும் திமுகவின் ஜெகத்ரட்சகன் ஆகியோர் வெற்றி பெற்றனர். 2014 தேர்தலில் அதிமுகவின் ஜி.ஹரியும், 2019ல் மீண்டும் ஜெகத்ரட்சகனும் வெற்றி பெற்றனர். சிட்டிங் எம்.பியாக இருப்பவர் ஜெகத்ரட்சகன் ஆவார்.


2019 லோக்சபா தேர்தல் முடிவு




எஸ். ஜெகத்ரட்சகன் (திமுக) - 6,72,190

ஏ.கே.மூர்த்தி (பாமக) - 3,43,234

ஒய்.ஆர்.பாவேந்தன் (நாம் தமிழர்) - 29,347

என். ராஜேந்திரன் (மக்கள் நீதி மய்யம்) - 23,771


ஒரு காலத்தில் தனது கோட்டையாக அரக்கோணத்தை வைத்திருந்தது காங்கிரஸ். மொத்தம் 6 முறை இங்கு காங்கிரஸ் வென்றுள்ளது. திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் வென்றுள்ளன. தமாகா, பாமக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு முறை வெற்றி கிடைத்துள்ளது. 


வாக்காளர்கள் விவரம் (2024 நிலவரம்):


மொத்தம் - 15,53,989

ஆண்கள் - 7,56,194

பெண்கள் - 7,97,632

மூன்றாம் பாலினம் - 164


எம்.பி ஜெகத்ரட்சகனின் செயல்பாடுகள் எப்படி?




அரக்கோணம் தொகுதியின் தற்போதைய எம்.பியான திமுகவின் ஜெகத்ரட்கன் பழம்பெரும் அரசியல்வாதி மட்டுமல், பழுத்த ஆன்மீகவாதியும், இலக்கியத்தைக் கரைத்துக் குடித்த தமிழ்பெருமகனும் கூட. இவரது ஆன்மீக உரைகளைக் கேட்டால் அன்று  முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம். தீவிர தமிழ் ஆர்வலர்.


விழுப்புரம் மாவட்டம்தான் இவரது பூர்வீகம். அரசியல்வாதியாக இவர் பல்வேறு நிலைகளில் இருந்துள்ளார். அதிமுகவில்தான் இவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. அதிமுக சார்பாக எம்.பியாக இருந்தவர். அதன் பின்னர் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் தனி அமைப்பைத் தொடங்கி நடத்தி வந்தார். முன்னாள் அமைச்சர் ஆர். எம். வீரப்பனுக்கு மிகவும் நெருக்கமானவர். அதன் பின்னர் 2009ல் திமுகவுக்கு வந்தார்.  திமுகவில் முக்கியத் தலைவராக திகழ்ந்து வருகிறார்.


அரக்கோணம் தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக ஜெகத்ரட்சகன் கூறுகிறார். கிராமங்களில் மின்சாரமே இல்லை என்ற நிலையை மாற்றியுள்ளதாகவும், குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தியிருப்பதாகவும் திமுக தரப்பு கூறுகிறது. இருப்பினும் சில திட்டங்கள் இன்னும் கூட நிலுவையில் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.


பேச்சு வளம் மட்டுமல்ல நல்ல பண பலமும் மிக்கவர் ஜெகத்ரட்சகன். கடந்த தேர்தலிலேயே இவர் பணத்தை வாரியிறைத்து அமர்க்களப்படுத்தியிருந்தார். இந்த முறையும் மீண்டும் ஜெகத்ரட்சகனே இத்தொகுதியில் போட்டியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த முறை வென்றது போலவே இந்த முறையும் ஜெகத்ரட்சகனுக்கு ஜெயம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.