இது என்ன புது ட்விஸ்ட்.. அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு குட்பை சொல்கிறதா சோனியா குடும்பம்?

Aadmika
Mar 17, 2024,06:15 PM IST

டில்லி : உத்திர பிரதேச மாநிலத்தில் காங்கிரசின் கோட்டைகளாக கருதப்படும் ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கு குட்பை சொல்ல சோனியா காந்தி குடும்பம் முடிவெடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது காங்கிரஸ் மட்டுமின்றி பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகள் இந்தியாவின் அதி முக்கிய தொகுதிகளாக காலம் காலமாக இருந்து வருபவை. இரண்டுமே காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்தவை.  இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே காங்கிரசின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருபவை. 




இந்திரா காந்தி முன்பு ரேபரேலியின் எம்.பியாக இருந்தார். ராஜீவ் காந்தி அமேதி எம்.பியாக இருந்தவர். பின்னர் இந்திரா - ராஜீவ் மறைவுக்குப் பின்னர்  இந்தத் தொகுதிகள் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்திக்கு இடம் மாறின. சோனியா தொடர்ந்து ரேபரேலியில் நின்று வென்றார். ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு வந்தார்.


கடந்த தேர்தலில் ரேபரேலியில் சோனியா வென்ற நிலையில் அமேதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்தார். நல்ல வேளையாக கேரளாவில் அவர் போட்டியிட்டு வென்றதால், நாடாளுமன்றத்திற்கு வர முடிந்தது. இந்த முறை வயது முதிர்வு மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்து, அதற்கு பதிலாக ராஜ்யசபா தேர்தலுக்கு ராஜஸ்தானில் இருந்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் சோனியா காந்தி.


சோனியா காந்திக்கு பதிலாக ரேபரேலி தொகுதியில் இந்த முறை அவரது மகள் பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பிரியங்கா களம் காணும் முதல் தேர்தலிலேயே காங்கிரசின் கோட்டையில் போட்டியிட்டால் அவர் நிச்சயம் வென்று விடுவார் என காங்கிரஸ் நம்பிக் கொண்டிருந்தது. அதே போல் கடந்த முறை ஸ்மிருதி இராணியிடம் தோற்ற அமேதி தொகுதியை கைப்பற்ற இந்த முறையும் அமேதி மற்றும் வயநாடு என இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாகவும் சொல்லப்பட்டது. அதில் வயநாடு வேட்பாளராக ஏற்கனவே ராகுல் காந்தி அறிவிக்க்ப்பட்டு விட்டார்.




இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி விரும்பவில்லை என்றும், அதனால் காங்கிரசின் கோட்டையாக இருக்கும் இந்த தொகுதிகளை கைவிட காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 


முன்னதாக மார்ச் 10ம் தேதி, காந்தியில் குடும்பத்தில் இருந்து ஒருவரை வேட்பாளராக அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் நிறுத்த கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் கட்சி கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் ஒரு வாரத்திற்குள் இந்த முடிவு தற்போது மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 




ரேபரேலி தொகுதியில் சோனியாவிற்கு பதில் பிரியங்கா நிறுத்தப்பட்டால் பாஜக நிச்சயம் பலம் வாய்ந்த வேட்பாளரை போட்டியிட வைக்கும். அப்படி நடந்தால் முதல் தேர்தலில், அதுவும் குடும்ப தொகுதியிலேயே பிரியங்கா தோற்றால் அது மானப்பிரச்சனையாகி விடும் என காங்கிரஸ் நினைக்கிறதாம். இருந்தாலும் கட்சியின் பல ஆண்டு கால கோட்டையாக இருக்கும் குடும்ப தொகுதியை கை கழுவினால் அது மக்களிடம் கட்சியின் செல்வாக்கை இன்னும் குறைக்கும் என்பதால் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் காங்கிரஸ் திணறி வருகிறதாம்.


மற்றொரு புறம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட வேண்டாம் என்னும் முடிவில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் உறுதியாக இருக்கிறார்களாம். ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் கடந்த முறை பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இராணியிடம் 55,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அமேதி தொகுதியை இழந்தார்.


இந்த முறையும் அமேதி தொகுதியில் போட்டியிட்டு, மீண்டும் ஸ்மிருதி இராணி வெற்றி பெற்று விட்டால் ராகுல் காந்தி எம்.பி., ஆக முடியாமல் போய் விடும். இதனால் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் பாதுகாப்பாக இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு, எம்.பி.,யாகி விடலாம் என ராகுல் காந்தி நினைக்கிறாராம்.


காங்கிரஸுக்கு மட்டுமல்ல.. காந்தி குடும்பத்துக்கும் கூட இந்த தேர்தல் பெரும் சோதனைதான்.. இந்த சோதனையிலிருந்து வென்று வந்தால் இருவரது பாரம்பரியமும், பெருமையும் தப்பிக்கும்.