லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள்.. தேர்தல் ஆணையர்கள் சென்னை வருகை.. 8ம் தேதி ஆலோசனை!
சென்னை: 2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வரும் ஜனவரி 8ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடாளுமன்ற லோக்சபாவுக்குத் தேர்தல் நடத்தப்படும். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தலாகும். 2024 ஆம் ஆண்டுக்கான தேர்தல் எந்த தேதியில் நடக்கும் என தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வரும் ஜனவரி 8ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகள் பங்குபெறுவார்கள். தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
கட்சிகள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களை அறிவதற்காகவும், தேர்தல் தேதியை முடிவு செய்வது தொடர்பான கருத்துகளுக்காகவும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.