மார்ச் 15ல் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பா? வேகமாக பரவும் தகவல்

Meenakshi
Mar 05, 2024,06:09 PM IST

புதுடில்லி: லோக்சபா தேர்தல் தேதி மார்ச் 15ம் தேதி அறிவிக்கப்படலாம் என்று தேர்தல் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இச்செய்தி தற்போது சோஷயில் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.


நடப்பு லோக்சபாவின் பதவி காலம் வரும் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அரசு தேர்தெடுக்கப்பட வேண்டும் என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதனால் 18வது லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல கட்டங்களாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் ஏப்ரல் 11 துவங்கி, மே 19 வரை என மொத்தம்  ஏழு  கட்டங்களாக நடத்தப்பட்டது. அதே போன்று இந்தாண்டும் பல கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் கட்சிகள் மற்றும் தலைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஜக சமீபத்தில் 195 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதே போல் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் அமைத்துள்ள இந்தியா கூட்டணியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடுகள் ஆகியன விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வருவதால் எந்த தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற அலசலும் தீவிரமாக நடந்த வருகிறது.


தமிழ்நாட்டில் தற்போது திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணிகள் உருவாகின்றன. இதுதவிர நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் இப்போதைக்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஏதாவது  கூட்டணியில் இணைந்தால் நான்கு முனையாக இது நீடிக்கும். ஒரு வேளை மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட்டால், 5 முனைப் போட்டியாக அது மாறும்.


இந்நிலையில்,  அனைத்து கட்சிகளும் தேர்தல் தொடர்பான வேலைகளில் தீவிரம் காட்டி வருவதால் தேர்தல் களம் கலை கட்டத் தொடங்கியுள்ளன. ஒரு சில கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களையும் தொடங்கி நடத்தி வருகின்றன.ஒவ்வொரு கட்சி தலைமைகள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைத்து தரப்பினர்களும் தேர்தல் வேலைகளில் தீவரம் காட்டி செயல்படுத்தி வருகின்றனர்.


நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில் தேர்தல் தேதி எப்போது வெளியாகும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாதம் 14 அல்லது 15ம் தேதி லோக்சபா தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்ற தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. 2019ம் ஆண்டு பின்பற்றப்பட்ட விதிமுறைகள் 2024ம் ஆண்டு தேர்தலிலும் பின்பற்றபடலாம் என்ற தகவலும் தற்போது இணைய பக்கங்களில்  பரவி வைரலாகி வருகின்றன.