Su.tha Arivalagan
Jul 19, 2023,09:39 AM IST
- மீனா
ஓரமாக நடந்து போய்க் கொண்டிருந்தார் அந்தப் பெண்.. அவரது நடையில் ஒரு சின்ன ஆவேசமும், கோபமும், விரக்தியும் தெரிகிறது. சாலையோரமாக போய்க் கொண்டிருந்தவர், ஒரு பஸ் எதிர் திசையில் வந்தபோது திடீரென பஸ் முன்பு போய் நின்று விட்டார்.. அவரது உடல் மொழியில் எந்தப் பதட்டமும் இல்லை.. தெளிவாக எதிர்கொண்டார்.. தனது மரணத்தை!
ஒரு நிமிடம் அந்த இடத்தில் இருந்த அத்தனை பேரும் உறைந்து போய் விட்டனர்.. பொசுக்கென முடிந்து போய் விட்டது அந்தப் பெண்ணின் வாழ்க்கை.. அது ஒரு தற்கொலை.. ஒரு நிமிடம்.. ஒரே ஒரு நிமிடம் அவர் யோசித்திருந்தால் நிச்சயம் இந்த முடிவை நாடியிருக்க மாட்டார்.. ஆனால் அவரை அந்த கோரமான முடிவுக்கு உந்தித் தள்ளியது எது... அத்தனை பேரின் மனதையும் உலுக்கியது இந்தக் கேள்விதான்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது.. இதைத்தான் அத்தனை பேரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.. உளவியல் ஆலோசகர்களும் இதைத்தான் சொல்லி வருகிறார்கள். ஆனாலும் இந்த அவலம் தொடர் கதையாகத்தான் இருக்கிறது. சம்பந்தப்பட்ட பெண் சேலத்தைச் சேர்ந்தவர், பெயர் பாப்பாத்தி. தனது மகனின் கல்லூரிக் கட்டணத்தைக் கட்ட முடியாமல், தான் இறந்தால் நிவாரண நிதி கிடைத்து மகன் படிப்பு தடைபடாமல் தொடரும் என்ற நோக்கத்தில் இதை செய்ததாக ஒரு தகவல் வெளியானது. அப்படி இல்லை என்றும் இன்னொரு செய்தி வெளியானது.. எது எப்படி இருந்தாலும் தற்கொலை நிச்சயம் தவறான முடிவுதான்.. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது
அந்த தாயுடைய தியாகம் பெரியதுதான். ஆனால் தியாகம் செய்வதாக நினைத்து அற்புதமான நமது உயிரை அர்ப்பணிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தாய் தன் மகனின் படிப்புக்கு தேவையான பணத்திற்காக தனக்கு தெரிந்தவர்களிடம் உதவி கேட்டிருக்கலாம். அப்படி உதவி கேட்டும் கிடைக்காத பட்சத்தில் ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு என்று எத்தனையோ தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்தகைய உதவி செய்யக்கூடிய தொண்டு நிறுவனங்களை நாடி இருக்கலாம். இதுவும் பயன் அளிக்கவில்லை என்றால் தன் மகனின் கல்லூரி நிர்வாகத்திடமே தன்னுடைய சூழ்நிலைகளை எடுத்துச் சொல்லி புரியவைத்து பணம் கட்டுவதற்காக சிறிது காலஅவகாசம் கேட்டிருக்கலாம்.
யாருக்குத்தான் இங்கு பிரச்சினை இல்லை.. பணம் இல்லாமல் எத்தனையோ பேர் வாழ்க்கையை நடத்தவில்லையா.. கஷ்டங்களும், நஷ்டங்களும்தானே வாழ்க்கையின் அடிப்படைக் கணக்கு.. லாபம் மட்டுமே இருக்க முடியுமா.. சந்தோஷம் மட்டுமே இருக்க முடியுமா.. எப்போதும் எல்லாமே நமக்கு தோதாக மட்டுமே நடந்து கொண்டிருக்க முடியுமா.. அப்படி எல்லோருக்கும் வாழ்க்கை அமையுமா.. இல்லையே.. பிரச்சினை என்று ஒன்று இருந்தால் கூடவே தீர்வு என்றும் ஒன்று இருக்கத்தானே செய்யும்.. அதுதானே இயற்கை.
தீர்க்கவே முடியாது என்று எந்த பிரச்சனையும் இங்கு கிடையாது. எல்லா பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு உண்டு. அதற்கு தற்கொலை என்று முடிவு கிடையாது. தற்கொலை என்பது நாம் பிரச்சினையிலிருந்து தப்பிக்க முயல்வது.. கிட்டத்தட்ட அதுவும் கூட ஒரு சுயநலம்தான்.. நாம் மட்டும் தப்பித்துக் கொள்வது.. ஆனால் பிரச்சினை தொடருமே! .
எதுவுமே, நாம் பிரச்சனையை கையாள்வதில் தான் இருக்கிறது. பிரச்சனைகள் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது தீரும் என்ற நம்பிக்கையில் தான் நாம் ஒவ்வொருவரும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்பிக்கைதானேங்க வாழ்க்கை. பணம்தான் நமக்கு பிரச்சனை என்றால் அந்த பணத்தை நம்மால் சம்பாதித்துக் கொள்ள முடியும். ஆனால் பணத்திற்காக இழந்த உயிரை எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்ப கொண்டு வர முடியாது. இதை ஒவ்வொருத்தரும் தன் மனதில் இருத்திக் கொண்டு, தற்கொலை எண்ணத்திலிருந்து வெளியே வர வேண்டும்.
தாய்க்கு நிகர் தாய் தான். இதை நம்மால் மறுக்க முடியாது. அம்மா என்றால் அன்பு பரிவு பாசம் அக்கறை பாதுகாப்பு தியாகம் அர்ப்பணிப்பு இவற்றிற்கெல்லாம் உருவம் கொடுத்தால் அவள்தான் தாய் என்பவள். சரியான வழியில் வாழ வேண்டும் என்று வழிகாட்ட வேண்டியவர்களே தவறான வழிகாட்டியாக மாறலாமா. தாயே இந்த முடிவைத்தானே எடுத்தார்.. என்று நாளை பிள்ளையும் அதே வழியைத் தேர்வு செய்தால் என்னாவது... !
படிப்பு என்பது நம்மிடம் இருந்து எவராலும் அழிக்க முடியாத சொத்து தான். அதேபோல் தான் நமக்கு வாய்த்த உறவுகளும் . தற்கொலை செய்து கொள்பவர்கள் ஒரு நிமிடம் நிதானித்தால் நாம் இறந்த பிறகு நாம் நேசித்தவர்களும் நம்மை நேசித்தவர்களும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று சிந்தித்தால் யாரும் இந்த முடிவை விரும்பி எடுக்க மாட்டார்கள்.
உலகத்திலேயே மிகவும் பொறுமையானது தாய்மைதான் என்று சொல்வார்கள்.. பத்து மாதம் ஒரு உயிரை சுமந்து, வலியுடன் வாழ்ந்து.. அந்தக் குழந்தையை அலறித் துடித்து வலித்துக் கதறி உயிரைப் பணயம் வைத்து பெற்றுக் கொடுக்கும் தாய்மை.. கடவுளுக்கு சமம். அப்படிப்பட்ட ஒரு தாயே.. தனது பொறுமையை இழந்து பூமியை விட்டுப் போகிறாள் என்றாள்.. அந்தப் பிள்ளையை இனி யார்தான் காப்பாற்ற முடியும்.. தாயாலேயே முடியாவிட்டால்.. வேறு யார் காப்பாற்றுவார்..!
எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் மனப் பக்குவம் அனைவருக்குமே தேவை.. பிறந்து விட்டோம்.. இயற்கையாக நம் முடிவு வரும் வரை நாம் வாழ்ந்தாக வேண்டும்.. அதில் யாருக்கும் சந்தேகமே இருக்கக் கூடாது.. வாழ்ந்துதான் பார்ப்போமே.. சவால்களை சந்திப்போம்.. இறுதி வரை போராடுவோம்.. நிச்சயம் வெற்றி கிடைக்காமலா போய் விடும்.. தைரியமா இருங்க, எதையும் நம்பிக்கையுடன் சந்திங்க.. நிச்சயம் ஜெயிப்பீங்க.