மதுபான முறைகேடு: மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Meenakshi
Oct 30, 2023,01:25 PM IST

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்  ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


மதுபான விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடத்தியதாகவும், மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாகவும் கூறி மணீஷ் சிசோடியா மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன் 8 மணி நேரம்  சிபிஐ விசாரணை  செய்த நிலையில், கடந்த 26ம் தேதி டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐயும், அமலாக்கத்துறையும் சேர்ந்து கைது செய்தது. 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட அவர் தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.


இந்த நிலையில், மணீஷ் சிசோடியா பலமுறை ஜாமீன் கேட்டு மனு செய்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் ஜாமீன் கிடைக்காததினால், ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். அங்கும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார் சிசோடியா. 




அங்கு இன்று நடந்த விசாரணையின் இறுதியில் ஜாமீன் தர மறுத்த உச்சநீதிமன்றம், சிசோடியா மீதான வழக்கை விரைவு கோர்ட் மூலம் வேகமாக விசாரிக்கவும் உத்தரவிட்டது. வழக்கை 6 முதல் 8 மாதத்திற்குள் முடிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மனைவியை பார்க்க மணீஷ் சிசோடியா அனுமதி கோரியதால், ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.