வி சாலையில் நடந்த TVK மாநாட்டின்போது.. விழுப்புரம் மாவட்டத்தில் இவ்வளவு மது விற்பனையா?

Aadmika
Oct 29, 2024,06:44 PM IST

விழுப்புரம் : அக்டோபர் 27ம் தேதி விஜய் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டின் போது விழுப்புரம் மாவட்டத்தில் மது விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் உள்ள வி.சாலையில் நடைபெற்றது. இதில் பல லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் திரண்டனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் காலை முதலே தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிய துவங்கியனர்.




விழுப்புரம் - கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தமாக 195 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. சாதாரண நாட்களில் இந்த கடைகளில் நடக்கும் மொத்த மது விற்பனையின் அளவு ரூ.4 கோடிக்கும் குறைவாக தான் இருக்கும். ஆனால் தவெக மாநாடு நடைபெற்ற ஒரு நாளில் மட்டும் ரூ.5.75 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. வழக்கத்தை விட ரூ.1.06 கோடி அதிகமாக மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஏற்கனவே கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து விட்டு ஏராளமானோர் உயிரிழந்த சோகத்தில் இருந்து அந்த மாவட்டம் முழுவதுமாக வெளி வராத நிலையில் ஒரே நாளில் மது விற்பனை அதிகரித்திருப்பதாக வெளியான செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொடர்ந்து மது விற்பனை தமிழ்கத்தில் அதிகரிப்பதற்கு அரசியல் கட்சிகள் காரணமா அல்லது மக்கள் காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


தவெக என்று இல்லை எந்தக் கட்சி மாநாடு அல்லது பொதுக்கூட்டம் நடத்தினாலும் அது நடைபெறும் சுற்றுப் பகுதியில் உள்ள மதுக் கடைகள் நிரம்பி வழிவதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். என்னதான் தலைவர்கள், குடித்து விட்டு மாநாட்டுக்கு, கூட்டத்துக்கு வரக் கூடாது என்று சொன்னாலும் தொண்டர்கள் குடிப்பதை நிறுத்துவதில்லை. அத்தனை பேரும் கிடையாது, ஆனாலும் கணிசமான அளவிலானோர் குடிப்பதை நிறுத்துவதில்லை. குடிக்காமல் வருவதும் இல்லை. இது காலம் காலமாக தொடர்கிறது. இதைத் தடுக்காமல் சமுதாயத்தில் எந்த அரசியல் கட்சியாலும் எந்த புரட்சியையும் ஏற்படுத்த முடியாது. இது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்