சென்னை முதல் தூத்துக்குடி வரை.. இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Su.tha Arivalagan
Dec 25, 2023,09:44 AM IST
சென்னை: சென்னை முதல் தூத்துக்குடி மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கடலோர தமிழ்நாட்டில் 10 முதல் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மழை பரவலாக இருக்காது என்றும் ஆங்காங்கே இருக்கும் என்றும் எனவே யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வெளியே போகும்போது குடையோட போங்க என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியைப் பொறுத்தவரை அடுத்த  3- 4 நாட்களுக்கு லேசான மழை இருக்கலாம். ஆனால் பயப்பட அவசியமே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.



சபரிமலைக்குப் போயிருப்போர் ஆங்காங்கே லேசான மழையை சந்திக்க நேரிடலாம். இருப்பினும் எந்த பிரச்சினையும் வராது என்று கூறியுள்ள வெதர்மேன், அரையாண்டு விடுமுறையையொட்டி நீலகிரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றிருப்போர் கவலைப்படத் தேவையில்லை என்றும் ஜாலியாக இருந்து விட்டு வருமாறும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் மாஞ்சோலைப் பகுதியில் 50 முதல் 100 மில்லி மீட்டர் அளவுக்கு கன மழை பெய்யும். இருப்பினும் அங்கு மட்டும்தான் கன மழை இருக்கும். 

உங்க விடுமுறையை ஜாலியா என்ஜாய் பண்ணுங்க..  ஜனவரி வரைக்கும் வட கிழக்குப் பருவ மழை நீடிக்கும்.  ஜனவரி முதல் வாரம் வரைக்கும் நீடிக்கலாம். இருப்பினும் எங்கு மழை இருக்கும் என்பதை கணிக்க இன்னும் டைம் இருக்கு. தாழ்வு நிலையைப் பொறுத்து மழை இருக்கும் என்று கூறியுள்ளார் வெதர்மேன்.