என்னாது சென்னைல மழை பெஞ்சுச்சா... என்னங்க சொல்றீங்க.. அச்சச்சோ.. நான் பார்க்காம போயிட்டேனே!

Su.tha Arivalagan
May 08, 2024,09:03 AM IST

சென்னை: சென்னையில் சில இடங்களில் அதிகாலையில் பெய்த திடீர் மழையால் மக்கள் ஹேப்பியாகியுள்ளனர். கடும் வெப்பமும் சற்று அடங்கி இதமான சீதோஷ்ணம் நிலவுகிறது.


கடந்த பல வாரங்களாக ஆரவாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த சம்மர் ஸ்பெஷல் "வெயில்".. இப்படி ஒரு வெயிலை பார்த்ததே இல்லப்பா என்று புலம்பும் அளவுக்கு வச்சு செய்து வருகிறது வெயில். எந்த டிரஸ்ஸையும் போட முடியலை, போட்ட வேகத்துலேயே தொப்பலா நனஞ்சு போயிடுது.. வீட்டுக்குள் இருக்க முடியலை, வெளியிலும் போக முடியலை.. குளிக்கலாம்னு குழாயைத் திறந்து உஷ்ணமாக கொட்டுகிறது தண்ணீர்.. இப்படி மக்களை வாட்டி வதைத்து வந்த வெயிலுக்கு சற்று பிரேக் விட்டுள்ளது கிளைமேட்.




இன்று அதிகாலையில் சென்னையின் சில பகுதிகளில் திடீரென லேசான மழை பெய்துள்ளது. சில இடங்களில் இது குளிர் காற்றுடன் மிதமாகவும் பெய்துள்ளது. சைதாப்பேட்டை, ஆலந்தூர், நுங்கம்பாக்கம், கிண்டி, கோடம்பூக்கம், எழும்பூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, மயிலாப்பூர், வடபழனி, தாம்பரம், ஆயிரம் விளக்கு, வடக்கில் வண்ணாரப்பேட்டை என்று ஆங்காங்கே நல்ல காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் காலையிலேய ஆரம்பிக்கும் அந்த அனல் வெப்பம் இன்று சற்று மிஸ்ஸிங்.


இதமான சூழல் நிலவுகிறது. பெரிய அளவுக்கு வெயில் சுடவில்லை. இதே போல தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தால் கூட சூப்பராகத்தான் இருக்கும் என்று மக்கள் ஹேப்பியாகியுள்ளனர்.  அதிகாலையில் வந்து விட்டு இந்த மழையைப்  பலரும் பார்க்கவில்லை. காரணம், பலரும் ரூமுக்குள் ஏசியைப் போட்டுக் கொண்டு அனல் பறக்கத் தூங்கிக் கொண்டிருந்ததுதான். காலையில் எழுந்து வந்தபோது, அடடா மழை பெய்யும் அந்த அழகை பார்க்காம போயிட்டோமே என்று பலர் இன்ப ஏமாற்றத்துக்குள்ளானார்கள். எப்படியோ காட்டு காட்டுன்னு காட்டிக் கொண்டிருக்கும் வெயிலின் தலையில் ஒரு கொட்டு வைத்து  சென்ற மழைக்கு நன்றிகள் பல.. அவ்வப்போது வந்து போங்க மிஸ்டர் வருணன்.. புண்ணியமாப் போகும்!


சென்னை மட்டுமல்லாமல், புதுச்சேரியிலும் கூட இன்று காலையில் கிளைமேட் நன்றாக இருந்தது. அதேபோல கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலும் கூட சூழல் மாறிக் காணப்படுகிறது. இதற்கிடையே, நல்ல காலம் பொறக்கப் போகுது, நல்ல மழை வரப் போகுது என்று தமிழ்நாடு வெதர்மேனும் நல்ல செய்தி சொல்லியுள்ளார். பிறகென்ன மக்களே.. உங்களுக்காக "சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்போமே" .. அப்படிங்கிற பாடல் இந்த இடத்தில் ஒலிக்கிறது.. கேட்டு சில் பண்ணுங்க!