"டோன்ட் ஒர்ரி".. தென் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு.. லேசான மழைக்கு.. வாய்ப்பு இருக்காம்!

Manjula Devi
Jan 18, 2024,06:19 PM IST

சென்னை: தென்  மாவட்டங்களில் 3 நாட்களுக்கு (18,19 மற்றும் 20) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வடகிழக்கு பருவமழை விடைபெற்று விட்டதாக வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இயல்பை விட அளவுக்கு அதிகமாக மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும்  தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பிறகு ஜனவரி முதல் வாரம் வரை வடகிழக்கு பருவ மழை தொடரும் . பின்னர் மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து வடகிழக்கு பருவ மழை முடிவுக்கு வரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 




இதனால் கடந்த சில நாட்களில் மழை குறைந்து பல்வேறு பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பகல் 10 மணி வரை கூட முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்ற வண்ணம் இருந்தனர்.


இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


ஜனவரி 18, 19, மற்றும் 20 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதே சமயம் நீலகிரி மாவட்டத்தில்  ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாம். அதேசமயம், இன்று முதல் 24 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலேயே நிலவக்கூடும்.


சென்னையை பொருத்தவரை, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.