முட்டைப் பொரியல் செய்றப்போ.. இதை பண்ணிப் பாருங்க.. சூப்பரா இருக்கும்..பயனுள்ள சமையல் குறிப்புகள்!

vanitha
Feb 05, 2024,04:50 PM IST

"ஹாய் சிஸ்டர்ஸ்.. என்ன பண்றீங்க"


"வேறென்ன.. சாயந்திரம் ஆச்சுல்ல.. அடுத்து டீ போடணும்.. குட்டீஸ்களுக்கு ஏதாச்சும் ஸ்னாக்ஸ் ரெடி பண்ணனும்"


அதுவும் சரிதான்.. என்னிக்குத்தான் நமக்கெல்லாம் ரெஸ்ட் இருக்கு.. சரி அதை விடுங்க, இன்னிக்கு நான் உங்களுக்கு என்ன சொல்ல வந்திருக்கேன் தெரியுமா? சில ஈஸியான யூஸ்புல் குக்கிங் டிப்ஸ் தரப் போறேன். அது என்னன்னு சொல்றேன்.. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.


-  முட்டை பொரியல் செய்யும் போது கடாயில் சிறிது எலுமிச்சை சாறு தடவிய பின் முட்டையை உடைத்து ஊற்றினால் முட்டை கடாயில் ஒட்டாமல் வரும்.


-  காய்கறிகளை சமைக்கும் போது, கழுவிய பின்தான் நறுக்க வேண்டும். நறுக்கிய பின் கழுவினால் அதில் உள்ள சத்துக்கள் குறைந்து விடும்.


சாதம் மீந்து போயிருச்சா.. கொட்டிராதீங்க




- சாதம் மீந்து விட்டால் அதை வீணாக கீழே கொட்டாமல், அதில் சிறிதளவு புளிக்கரைசல், உப்பு போட்டு கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். அடுத்த நாள் காலையில் எடுத்து, கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், மஞ்சள் தூள் கலந்து வதக்கிய பின் சாதத்தை போட்டு கிளறினால் சுவையான இன்ஸ்டன்ட் புளி சாதம் ரெடி.


- காய்கறிகள் வீட்டில் ஒன்னு ரெண்டு மீதி இருந்தால், அனைத்து காய்கறிகளையும் போட்டு வேகவைத்து தேங்காய், சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து காய்கறி கலவையில் சேர்த்து தாளித்து ஆறியபின் தயிர் கலந்து இறக்கினால் காய்கறி அவியல் ரெடி.


- கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை சாப்பிடும் பொழுது நாவில் அரிப்பு தன்மை ஏற்படும். இதைத் தவிர்க்க கிழங்குகளை வேக வைக்கும் பொழுது சிறிது புளி கலந்து வேக வைத்தால் சாப்பிடும் போது அந்த நறநறப்பு இருக்காது.


- பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு, நட்ஸ்களை மிக்ஸியில் பொடியாக அரைத்து, தோசை ஊற்றும்போது மேலே தூவி தோசையுடன் சுட்டு கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


பஜ்ஜியுடன் இட்லி மாவு கலந்து சுடுங்க




- சாம்பாருக்கு குக்கரில் பருப்பு வேக வைக்கும் பொழுது அதனுடன் மஞ்சள் தூள், பூண்டு இரண்டு பல், பெருங்காயம் சிறிதளவு, எண்ணெய் ஒரு ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து  வேக வைத்தால் பருப்பு பொங்கி வெளியே வராது. சுவையும் நன்றாக இருக்கும்.


- வீட்டில் பஜ்ஜி செய்யும் போது பஜ்ஜி மாவுடன் சிறிது இட்லி மாவு கலந்து பஜ்ஜி செய்தால் பஜ்ஜி நன்றாக உப்பி வரும். சுவையும் அருமையாக இருக்கும் .


- டிரை ஃப்ரூட்ஸ் வகைகளான அத்திப்பழம், உலர் திராட்சை, பேரிச்சை, செர்ரி போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. வைத்தால் அதில் உள்ள உலர் தன்மை கெட்டு இறுகிப் போய்விடும்.


சுண்டலை ஊற வைக்க மறந்துட்டீங்களா?




- சுண்டல், மொச்சை, தட்டப்பயறு போன்ற பயிறு வகைகளை முதல் நாள் இரவே ஊற வைக்க மறந்துட்டீங்களா? கவலைப்படாதீங்க! கடாயில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து குக்கரில் வேக வைத்தால்  ஈசியாக வெந்துவிடும். குழம்பும் ருசியாக இருக்கும்.


- கோதுமை ரவை உப்புமா செய்து போர் அடிக்குதா.. கோதுமை ரவையை ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து,பொடித்த மிளகு சீரகம், துருவிய இஞ்சி, தேவையான உப்பு சேர்த்து வதக்கி, கோதுமை ரவையை சேர்த்து பாசிப்பருப்பு சிறிதளவு கழுவி சேர்த்து ரெண்டு விசில் வைத்து இறக்கினால் சுவையான கோதுமை ரவை பொங்கல் ரெடி. இன்ஸ்டன்டா பண்ணிரலாங்க.


என்னங்க இந்த குக்கிங் டிப்ஸ் எல்லாம் உங்களுக்கு புடிச்சிருக்கா.. இதை நீங்க ட்ரை பண்ணி பாருங்க.. அடுத்து இன்னொரு ரெசிபி இல்லாட்டி குக்கிங் டிப்ஸ் ஓட வரேன்.. "பை"ங்க!