மயிலாடுதுறை மக்களே.. ஊருக்குள்ள சிறுத்தை நடமாடுது.. கவனமா இருங்க.. போலீஸ் எச்சரிக்கை!
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று உலா வரும் வீடியோ வெளியாகி, மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த சிறுத்தையைப் பிடிக்கும் நடவடிக்கை தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் நள்ளிரவில் சாலையில் சிறுத்தை ஒன்று உலா வருவது போன்ற வீடியோ காட்சி வெளியானது. முதலில் ஏதோ விலங்கு என்று இருந்துள்ளனர். ஆனால் அந்த விலங்கின் காலடியை வனத்துறையினர் ஆய்வு செய்து இது சிறுத்தையின் காலடி கண்டுபிடித்தனர். இந்த வீடியோவை பார்த்துவிட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
காவல்துறையினர் விரைந்து அப்பகுதிக்கு சென்று சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் அப்பகுதியில் சிறுத்தை கால் தடம் உள்ளதை அறிந்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை நாய் ஒன்றை துரத்திக் கொண்டு ஓடுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் பொது இடங்களில் வனத்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ஒலிபெருக்கியால் தகவல் கொடுத்தும், எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். பொதுமக்கள் யாரேனும் சிறுத்தையை கண்டால் 9626709017 என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வீதியில் சிறுத்தை வலம் வரும் வீடியோ பதிவு
அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள பால சரஸ்வதி பள்ளிக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். சுற்றி காடுகள் இல்லாத மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை எப்படி வந்தது என்பது ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஊருக்குள் நடமாடிய சிறுத்தை தற்போது எங்கு பதுங்கி உள்ளது.. என்ற அச்சத்தில் மக்கள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையைத் தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர்.