leo review: விஜய்யின் லியோ எப்படி இருக்கு -  ரசிகர்களை கவர்ந்ததா?

Aadmika
Oct 19, 2023,10:47 AM IST

சென்னை : ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே விஜய்யின் லியோ படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவிலும் எங்கு திரும்பினாலும் லியோ படம் பற்றிய பேச்சு தான் கேட்க முடிகிறது. 

டைரக்டர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்துள்ள படம் லியோ. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். அதிகமான பிரச்சனைகள், சர்ச்சைகளை, விமர்சனங்களை சந்தித்த விஜய் படம் என்றால் அது லியோ தான். மற்ற மாநிலங்களில் அதிகாலை 5 மணிக்கே லியோ படத்தின் ஃபர்ஸ்டே ஃபர்ஸ் ஷோ திரையிடப்பட்ட நிலையில் தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் ஷோ துவங்கி உள்ளது. 



வழக்கமான விஜய் - லோகேஷ் கனகராஜ் படம் தான் என்றாலும் அதை கொஞ்சம் வித்தியாசமாக கொடுத்திருக்கிறார்கள். அமைதியான, சாந்தமான பார்த்திபன் கேரக்டரில் விஜய். விலங்குகள் நல ஆர்வலராகவும், காஃபே உரிமையாளராகவும் இருக்கிறார். அவரது மனைவியாக த்ரிஷா, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். காஷ்மீரில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கையில் வில்லன் கும்பல் குறுக்கிடுகிறது. வில்லன்களுடன் மோதல், குடும்ப மென்டிமென்ட் என ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள லியோ. கும்பல் கும்பலாக துரத்தும் வில்லன்களிடம் இருந்து குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார்? சாந்தமாக இருக்கும் பார்த்திபன் எப்படி வன்முறைகளை கையில் எடுக்கிறார்? என்பது படத்தின் மீதி கதை.

முதல் 10 நிமிடங்கள் தியேட்டரில் தெறிக்க விட்டுள்ளார்கள். இந்த 10 நிமிடங்கள் என்னவென்றே புரியவில்லை என பலர் கூறினாலும், விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள லியோ படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃபில் சன்பென்ஸ் நிறையவே வைத்துள்ளனர். ஆனால் இது படத்தின் திரைக்கதையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. விஜய் புதிய லுக்கில், ஆனால் வழக்கமான விஜய்யாக பார்த்திபன் - லியோ தாஸ் என கலக்கி உள்ளார். ஃபர்ஸ்ட் ஆஃபுடன் ஒப்பிடுகையில் செகன்ட் ஆஃப் கொஞ்சம் சுமார் தான் எனலாம். கொஞ்சம் பில்டப்புடன் படத்தை சிங்கமாக ஆரம்பித்து இருந்தாலும் கடைசியில் என்னவோ படத்தை குழப்பத்துடனேயே முடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.



இது லோகேஷ் கனகராஜ் படமாக இல்லாமல், விஜய் படமாக எடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். வழக்கமாக அவருடைய படங்களில் முதல் படத்தின் தொடர்ச்சியாக அங்கு அங்கு சில கேரக்டர்கள், சீன்களை வைத்திருப்பார். ஆனால் லியோவில் கைதி, விக்ரம் படங்களின் தடங்கள் எதுவும் இல்லை. விக்ரமில் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை தான் வன்முறையாக வைத்திருந்தார். ஆனால் லியோவில் படமே வன்முறையாக தான் உள்ளது... ஆனால் படத்தில் ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு.. அதை தியேட்டரில் போய்ப் பார்த்து தெரிஞ்சுக்கங்க.! 

தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற சீன்கள் நிறையவே வைத்துள்ளார். விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைய உள்ளன. விஜய் தனது நடிப்பில் கலக்கி உள்ளார். விஜய் ரசிகர்களாக இல்லாதவர்களும் கூட லியோ விஜய்யை கண்டிப்பாக ரசிப்பார்கள். வழக்கம் போல் அனிருத் இசையில் பட்டையை கிளப்பி உள்ளார். அவரின் பேக்கிரவுண்ட் இசை படத்திற்கு மிகப் பெரிய பிளஸ். போலீஸ் அதிகாரியாக வரும் கெளதம் மேனன், த்ரிஷா ஆகியோர் தங்களின் கேரக்டரை கச்சிதமாக செய்துள்ளனர். செகன்ட்ஆஃபில் அர்ஜூன் ஸ்கோர் செய்து விட்டார்.

மொத்தத்தில் விஜய்யின் லியோ, லோகேஷ் கனகராஜிடம் ரசிகர்கள் எதிர்பார்த்த பல விஷயங்களை தர தவறி இருந்தாலும், விஜய்க்காக பார்க்கலாம் என்று தான் சொல்ல வைத்துள்ளது. கலவையான விமர்சனங்களையே லியோ படம் பெற்றுள்ளது...எப்படி இருந்தாலும் இது விஜய்க்கும், லோகேஷ் கனகராஜுக்கும் முக்கியமான படமாக மாறியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.


Video: https://youtu.be/LaAmkWu7_lE?si=Pl7il_oefdnZsQWy