ஒரு போராளியின் பிறந்த நாள்.. சீமானுக்குக் குவிந்த வாழ்த்துகள்.. எடப்பாடி பழனிச்சாமி முதல் விஜய் வரை!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பல்துறைப் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சீமான்.. நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி வருபவர். இப்போது அரசியல் தலைவராக தமிழ்நாட்டின் மிக முக்கிய அரசியல் சக்தியாக வலம் வருபவரும் கூட.
1970ம் ஆண்டு நவம்பர் 8ம் நாள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையாங்குடி வட்டத்தில் உள்ள அரனையூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர் சீமான். பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரி படிப்பு முடிந்த பின் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்னும் கனவோடு சென்னை வந்தவர். அங்கு மணிவண்ணன், பாரதிராஜா போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.
சில படங்களில் வசனம் எழுதியுள்ளார். மாயாண்டி குடும்பத்தார், பொறி, பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் தன் நடிப்பு திறனையும் வெளிக்காட்டியுள்ளார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
2010ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கி அதன் முதன்மை ஒருங்கிணைப்பாளாராக உள்ளார். ஈழ போராட்டத்துக்காக ஐந்து முறை கைது ஆகியுள்ளார். தமிழ் மொழியில் அதிக ஈடுபாடு கொண்டவர். இவர் ஒரு பகுத்தறிவாளர்.
சீமான் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். நடிகர் விஜய் சீமானை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்களை தொடர்ந்து இன்னும் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.