2 மணி நேரம் .. லோக்சபாவை உலுக்கி எடுத்த ராகுல் காந்தி.. அனல் பறக்க பேச்சு.. பாஜக எம்.பிக்கள் ஆவேசம்!

Su.tha Arivalagan
Jul 01, 2024,05:35 PM IST

டெல்லி: லோகச்பாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று அனல் பறக்க பேசி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் இடம் பெற்ற அவரது உரையால் லோக்சபாவில் பெரும் புயலே வீசி ஓய்ந்தது.


குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இன்று தொடங்கியது. லோக்சபாவில்  தீர்மானத்தின் மீதான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்துப் பேசினார். அவரது பேச்சு லோக்சபாவை பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டது. பாஜகவினர் ராகுல் காந்தியின் பேச்சை எதிர்பார்க்கவில்லை. அப்படி ஒரு அனல் பறந்த பேச்சை வெளிப்படுத்தினார் ராகுல் காந்தி.




கிட்டத்தட்ட 2 மணி நேரமாக ராகுல் காந்தி படு ஆவேசமாகவும், வாதங்களை எடுத்து வைத்தும், பல்வேறு ஆவணங்களைக் காட்டியும் விடாமல் பேசினார். அவரது பேச்சின்போது பலமுறை பாஜக எம்.பிக்கள் எழுந்து ஆவேசமாக ஆட்சேபனை தெரிவித்தனர். கடந்த 10 வருடங்களில் பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் பேசியபோது குறுக்கிட்டதில்லை. ஆனால் அவரே இன்று 2 முறை குறுக்கிட்டு மறுத்துப் பேசும் அளவுக்கு ராகுல் காந்தியின் பேச்சில் அனல் பறந்தது.


உள்துறை அமைச்சர் அமித்ஷா பலமுறை எழுந்து ராகுல் காந்தியின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆவேசமாக மறுப்பு தெரிவித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மறுப்பு தெரிவித்தார். பாஜக எம்.பிக்கள் தொடர்ந்து குரல் எழுப்பியபடியே இருந்தனர். ஆனாலும் ராகுல் காந்தியின் பேச்சு நிற்கவில்லை. மணிப்பூர் விவகாரம், அக்னிவீர் திட்டம், நீட், இந்து மதம் என்று ஒவ்வொரு பிரச்சினையாக எடுத்து வைத்து அனல் பறக்கப் பேசினார் ராகுல் காந்தி. 


ராகுல் காந்தியின் பேச்சிலிருந்து சில துளிகள்:




இந்தியா என்ற சிந்தனை மீது திட்டமிட்டு முழு அளவிலான தாக்குதலை பாஜக தொடுத்துள்ளது. அரசியல் சாசனத்தை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் மக்கள் அந்த பேரழிவை தங்களது வாக்கின் மூலமாக தடுத்து நிறுத்தி விட்டனர். 


எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டனர். என் மீதே பல வழக்குகள் போடப்பட்டன. பல மணி நேரம் என்னிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. 55 மணி நேரம் என்னிடம் விசாரணை நடத்தினர். பலர் இன்னும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு பழிவாங்கியது பாஜக, அழித்தது.


முன்பு ஜெய் ஸ்ரீராம் என்று முழங்கிக் கொண்டிருந்த பாஜகவினர் இப்போது ஜெய் சம்விதான் என்று முழங்குவது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. காரணம், மக்கள் அளித்த தீர்ப்பு. அந்தத் தீர்ப்பு  பாஜகவினரை இறங்கி வரச் செய்துள்ளது.


எதிர்க்கட்சியாக இருக்க நான் பெருமைப்படுகிறேன். அதற்காக மகிழ்கிறேன். எங்களைப் பொறுத்தவரை அதிகாரத்தை விட அரசியல் சாசனமும், மக்களும்தான் பெரிது. பாஜகவினருக்கு அதிகாரம் மட்டுமே பெரிது. அதிகாரத்திற்காகவே அவர்கள் செயல்படுகிறார்கள். இதுதான் உண்மை.


பரமாத்மா தன்னை நேரடியாக வழி நடத்துவதாக பிரதமர் மோடி கூறினார். அந்த பரமாத்மாதான் மோஜிடியை பல காரியங்கள் செய்யச் சொல்லி இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அவரைத் தவிர மற்ற எல்லோருமே வெறும் உடல்கள்தான். நாமெல்லாம் பிறப்போம், இறப்போம்.




பிரதமர் சொல்கிறார், மகாத்மா காந்தி இறந்து விட்டார். ஒரு திரைப்படம் மூலம்தான் அவர உலகம் அறிந்தது என்று கூறுகிறார். தேசத் தந்தையை எப்படி புறக்கணிக்கிறார்கள் இவர்கள்.


அனைத்து மதங்களுமே தைரியத்தையும், அகிம்சையையும், சகிப்புத் தன்மையையும், கருணையையும் போதிக்கின்றன. ஆனால் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வன்முறையைப் போதிக்கிறார்கள். இவர்கள் மட்டும் இந்துக்கள் அல்ல.. அனைவருமே இந்துக்கள்தான். இவர்கள் வன்முறையை போதிக்கும், அதைக் கடைப்பிடிக்கும் இந்துக்கள். துவேஷத்தையும், வெறுப்பையும், பொய்யையும் கடைப்பிடிக்கும் இந்துக்கள்.


சிவ பெருமானின் படத்தைப் பாருங்கள். அவரது முகத்தைப் பார்த்தால், இந்துக்கள் வெறுப்பையும், அச்சத்தையும் பரப்புபவர்கள் அல்ல என்று தெரியும். ஆனால் பாஜகவினர் அதைத்தான் 24 மணி நேரமும் செய்து வருகின்றனர்.


அக்னிபாத் திட்டத்தை உருவாக்கியது ராணுவம் அல்ல. அதை உருவாக்கியது பிரதமர் மோடி. எங்களது அரசு வரும்போது இந்தத் திட்டத்தை ஒழிப்போம்.  இது நமது ராணுவத்திற்கு எதிரானது, நமது தேச பக்திக்கு எதிரானது, நாட்டு மக்களுக்கு எதிரானது.




மணிப்பூரை எரித்தது பாஜகவின் கொள்கைகள்தான். அந்த மாநிலத்தில் உள்நாட்டுப் போரை உருவாக்கி விட்டது பாஜகதான். இன்னும் அந்த மாநிலத்திற்குப் போகாமல் இருக்கிறார் பிரதமர் மோடி. 


பண மதிப்பிழப்பு சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள். என்ன பயன் கிடைத்தது.. தவறான ஜிஎஸ்டி கொள்கையால் நாட்டின் வேலைவாய்ப்பே பறி போய் விட்டது. அதன் முதுகெலும்பையே முறித்து விட்டீர்கள். விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கோரி போராட்டம் நடத்தினர். ஆனால் அதைக் கண்டு கொள்ளவே அரசு விரும்பவில்லை.


நீட் என்ற பெயரில் பணக்காரர்களுக்கு வசதி செய்து கொடுத்து வருகிறீர்கள். இதனால் டியூஷன் கோச்சிங் சென்டர் வைத்திருப்பவர்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். இது வர்த்தக தேர்வாக மாறி விட்டது. பணக்கார மாணவர்களுக்கே இது உதவுகிறது.. அவர்களுக்காகவே இதை வடிவமைத்துள்ளனர். அப்பாவி ஏழை மாணவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.


பாஜக தலைவர்களையே மிரட்டுகிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்கிறேன்.. நீங்கள் பயப்படாதீர்கள்.. உங்களைக் காக்கும் அபய முத்திரை எங்களிடம் உள்ளது (கை சின்னத்தைக் காட்டினார் ராகுல் காந்தி). இதைத்தான் அனைத்து மதங்களும் நமக்கு போதிக்கின்றன. அபய முத்திரை காங்கிரஸ் கட்சியின் சின்னம். இது பாதுகாப்பைத் தரும், அன்பைத் தரும், அச்சத்தை அகற்றும், பாதுகாக்கும். இதைத்தான் இந்து மதமும், இஸ்லாமும், சீக்கிய மதமும், புத்த மதமும், அனைத்து மதங்களும் போதிக்கின்றன, நாங்களும் அதையே சொல்கிறோம்.




இந்த அவையின் உயரிய தலைவர் சபாநாயகர்தான். நீங்கள் சபாநாயகராக பொறுப்பில் அமர்ந்தபோது நானும், பிரதமரும் சேர்ந்து உங்களை இருக்கையில் அமர வைத்தோம். அப்போது எங்களுக்கு நீங்கள் கை குலுக்கினீர்கள். பிரதமரிடம் கை குலுக்கியபோது பணிவுடன் குணிந்து கை குலுக்கினீர்கள். என்னிடம் கை குலுக்கியபோது நிமிர்ந்த நிலையில் கை குலுக்கினீர்கள். இந்த அவையில் பெரியவர் நீங்கள்தான், பிரதமர் அல்ல என்று ராகுல் காந்தி பேசினார்.


ராகுல் காந்தியின் இந்த அனல் பறக்கும் பேச்சு லோக்சபாவை இன்று படு சூடாக்கி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ராகுல் காந்தி இப்படி ஆவேசமாக பேசியதும், பாஜகவினர் கொந்தளித்ததும் இது 2 முறையாகும். முதல் முறை அவர் பேசியபோது அதானி புகைப்படத்தைக் காட்டியும், பிரதமர் மோடியை நேரடியாக குறை கூறியும் ஆவேசமாக பேசியது நினைவிருக்கலாம். ஆனால் கடந்த முறையை விட இந்த முறை ராகுல் காந்தி அதிக ஆவேசம் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.