மாரடைப்பால் உயிரிழந்த.. நடிகர் மனோஜ் உடலுக்கு திரை உலகினர் அஞ்சலி.. இன்று பிற்பகலில் இறுதிச் சடங்கு
சென்னை: மாரடைப்பால் நேற்றிரவு உயிரிழந்த நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதி தமிழ் சினிமாவில் குறுகிய படங்கள் நடித்தாலும், வெற்றி பெற்ற படங்களாக நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தவர். குறிப்பாக இவர் நடித்த வருஷமெல்லாம் வசந்தம், தாஜ்மஹால், அல்லி அர்ஜுனா, சமுத்திரம், உள்ளிட்ட படங்கள் ரசிக்கும்படி இருந்தது. அதிலும் எங்கே அந்த வெண்ணிலா, சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால், திருப்பாச்சி அருவாள ஆகிய பாடல்கள் அக்கால இளைஞர்கள் முதல் தற்போது வரை அனைவரும் விரும்பி பார்க்கும் பிரபலமான பாடலாகவும் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குனராகவும் வலம் வந்த மனோஜ் மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கி உள்ளார். சினிமாவில் அப்பாவைப் போலவே மிகப்பெரிய இயக்குனராக சாதிக்க வேண்டும் என்ற இவரது கனவு நனவாகவில்லை. பின்னர் விருமன், ஈஸ்வரன் என ஒரு சில படங்களில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரீஎன்ரி கொடுத்து, சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது.
48 வயதான பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிக்கு சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து ஓய்வில் இருந்த மனோஜ் பாரதிக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரின் இறப்பு செய்தி தமிழ் சினிமாவில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாரடைப்பால் நேற்றிரவு உயிரிழந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் தற்போது சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரை உலகினர் திரண்டு அவரது இல்லத்திற்குச் சென்று இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை இவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.