பெரும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தைத் தாங்கும் சக்தி லட்சத்தீவுக்குக் கிடையாது.. கூறுகிறார் எம்.பி!

Su.tha Arivalagan
Jan 15, 2024,02:48 PM IST

மினிக்காய்: லட்சத்தீவு மிக மிக சென்சிட்டிவான ஒரு பிராந்தியம். பவளப்பாறைகள் நிரம்பிய கடற் பகுதி இது. சுற்றுச்சூழல் ரீதியாக இது மிக மிக சென்சிட்டிவானது. அதை விட முக்கியமாக, இங்கு வெறும் 10 தீவுகளில்தான் மனிதர்கள் வசிக்கிறார்கள். இங்கு ஹோட்டல் வசதியும் மிக மிக  குறைவு. எனவே மிகப் பெரிய அளவில் இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்தால் அதை சமாளிப்பது சிக்கலாகி விடும். அத்தோடு இந்தப் பிராந்தியத்தின் சுற்றுச்சூழலுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று லட்சத்தீவு எம்.பி. முகம்மது பைசல் கூறியுள்ளார்.


சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவுக்குச் சென்றிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பலரையும் கவர்ந்திழுத்தன. இந்த நிலையில் பிரதமரின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த சில அமைச்சர்கள் விஷமத்தனமாக கருத்து கூறப் போக, பெரும் ரணகளமாகி விட்டது.




மாலத்தீவுகளுக்கு எதிராக இந்தியர்கள் கொந்தளித்து விட்டனர். சமூக வலைதளங்களில் மாலத்தீவுகளைப் புறக்கணிப்போம், லட்சத்தீவுக்குச் செல்வோம் என்ற கோஷம் வலுத்து வந்தது. இந்த நிலையில் லட்சத்தீவு எம்.பி. முகம்மது பைசல் லட்சத்தீவுக்கு பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வந்தால் அதைத் தாங்கும் சக்தி அந்தத் தீவுக்குக் கிடையாது என்று கூறியுள்ளார்.


லட்சத்தீவின் எதார்த்த நிலை குறித்தும் அவர் விளக்கமாக ஒரு பேட்டி அளித்துள்ளார். என்டிடிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:


லட்சத்தீவுக்கு இந்தியாவின் எந்த பகுதியிலிருந்தும் நேரடியான விமானங்கள் இல்லை. அந்த தீவில் வெறும் 150 பேர் மட்டுமே தங்க முடியும். அந்த அளவுக்குத்தான் ஹோட்டல் வசதி உள்ளது.  இந்தத் தீவு சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் சென்சிட்டிவானது. பவளப்பாறைகள் நிரம்பிய தீவு இது. பெருமளவில் சுற்றுலாப்பயணிகள் வந்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.


இதன் காரணமாகத்தான் "ஒருங்கிணைந்த தீவு நிர்வாகத் திட்டத்தை" உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி ரவீந்திரன் கமிஷன் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில்தான் வளர்ச்சித் திட்டங்கள் திட்டமிடப்பட வேண்டும். இதன் அடிப்படையில்தான் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்த முடியும்.




இந்த அறிக்கையில் தீவில் எத்தனை பேர் தங்க முடியும், எந்த அளவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கலாம் என்பதையும் வரையறுத்துள்ளது.  இந்தத் தீவின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டுதான், சுற்றுலாப் பயணிகளை கட்டுக்குள் வைத்துள்ளார்கள். இங்கு சுற்றுலா வரும் பயணிகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியையும் அளிக்க வேண்டும்.


லட்சத்தீவில் மொத்தம் 36 தீவுகள் உள்ளன. அதில் 10 தீவுகளில்தான் மனிதர்கள் வசிக்கின்றனர். லட்சத்தீவு மக்களில் 8 முதல் 10 சதவீதம் பேர்தான் சுற்றுலாவை நம்பியுள்ளனர். லட்சத்தீவை யாரும் முதல் சாய்ஸாக சுற்றுலாவுக்கு தேர்ந்தெடுப்பதில்லை. தற்போது மாலத்தீவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதால்தான் பலரும் லட்சத்தீவு குறித்துப் பேசுகின்றனர் என்று பைசல் கூறியுள்ளார்.


சேர மன்னர்களின் ஆட்சியில் இருந்த லட்சத்தீவு




இந்தியாவின் ஒருங்கிணைந்த தீவுக் கூட்டமான லட்சத்தீவு, கேரளாவுக்கு வெகு அருகே அரபிக் கடலில் அமைந்துள்ளது. இது ஒரு யூனியன் பிரதேசம். கிட்டத்தட்ட 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்தத் தீவுக் கூட்டம் அமைந்துள்ளது. இதன் தலைநகர் கவரட்டி ஆகும்.


லட்சத்தீவு ஆதி காலத்தில் தமிழ் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதி என்பது ஆச்சரியமான வரலாறு. அதாவது சேர மன்னர்களின் ஆளுகையின் கீழ் இந்தத் தீவு இருந்துள்ளது. சேரர்களின் கடைசிக்கட்ட ஆட்சிக்காலத்தில்தான் இங்கு மக்கள் குடியேற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீவு குறித்து பதிற்றுப்பத்து, புறநாணூறு ஆகிய சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. பல்லவர் ஆட்சியின் கீழும் இந்தத் தீவு பின்னர் இருந்துள்ளது.


ஆரம்பத்தில் இங்கு வசித்த மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றியுள்ளனர். பின்னர் சைவம், வைணவம் என மாறியுள்ளனர். அதன் பிறகு இந்துக்களாகவும், பிறகு இஸ்லாமியர்களாகவும் மாறியுள்ளதாக வரலாறுகள் குறிப்பிடுகின்றன. லட்சத்தீவு மக்கள் தற்போது பேசும் பிரதான மொழி மலையாளம் ஆகும்.


இயற்கை எழில் கொஞ்சும் தீவுகள் நிரம்பிய லட்சத்தீவு, இந்தியாவின் அழகிய அம்சங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.