பார்த்து வரக் கூடாதா.. முட்டாள்.. திட்டிய கணவன்.. 3 நிமிடத்தில் டைவர்ஸ் வாங்கிய மனைவி!
குவைத் சிட்டி: திருமணம் முடிந்து பெண்ணும் மாப்பிள்ளையும் நடந்து சென்ற போது, கால் தடுக்கி கீழே விழுந்த மணமகளை 'முட்டாள்' என திட்டிய மணமகனிடம் இருந்து விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார் மணமகள்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்பெல்லாம் அப்படி இல்லை.. ஆன்லைனில் நிச்சயிக்கப்பட்டு, கோர்ட்டில் விவாகரத்தில் போய் பல திருமணங்கள் முடிந்து விடுகின்றன. திருமணங்கள் சமீப காலமாக அதிகளவில் விவாகரத்தில் தான் போய் முடிகிறது. திருமண பந்தம் ஒரு சிலருக்கு மட்டுமே மகிழ்ச்சியாக அமைகிறது. வெகு பலருக்கு அது ஒரு கசப்பான அனுபவமாக அமைந்து விடுகிறது. அதிலும் குறிப்பாக காதலித்து திருமணம் செய்பவர்கள் தான் அதிகளவில் விவாகரத்தை பெறுகின்றனர்.
தவிர்க்க முடியாத பல காரணங்களுக்கு தான் முன்னர் எல்லாம் விவாகரத்து பெற்று வந்தனர். ஆனால், தற்போது அப்படி இல்லை, என் புருஷன் ராத்திரியெல்லாம் குறட்டை விடுகிறார் என்று டைவர்ஸ் கேட்ட மனைவிகளை கடந்த காலங்களில் நிறையப் பார்த்துள்ளோம். அதுபோல பல சில்லியான காரணங்களுக்காக மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்ட கணவர்களையும் காண முடிகிறது.
சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட விவாகரத்து பெற்று வருகின்றனர். ஆனால் குவைத்தில் பாருங்க, திருமணம் முடிந்த கையோடு ஒரு தம்பதியினர் விவாகரத்து பெற்றுள்ளனர். எதற்கு தெரியுமா? காரணம் தெரிந்தால் அதிர்ந்து தான் போவீர்கள்.... அதிர்ச்சி அடையாம படிங்க வாங்க.
குவைத் நாட்டை சேர்ந்த ஒரு ஜோடி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் முடிந்தனர். திருமணம் முடிந்து எல்லோரும் சந்தோஷமாக புறப்பட்டனர். மாப்பிள்ளையும், பெண்ணும் ஜாலியாக ஜோடியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது படிக்கட்டில் கால் தடுமாறி மணப்பெண் விழுந்து விட்டார். இதுவே நம்ம ஊராக இருந்திருந்தால், அச்சச்சோ, செல்லமே பார்த்து வரக் கூடாதா என்று கேட்டு நம்ம மாப்பிள்ளைகள் அப்படியே மணமகளை அலேக்காக தூக்கி, "கையில் மிதக்கும் கனவா நீ.. கை கால் முளைத்த காற்றா நீ" என்று பாட்டு பாடியபடியே சுமந்து சென்றிருப்பார்கள். ஆனால் இந்த குவைத் மாப்பிள்ள வேற மாதிரி போல.
விழுந்த மனைவியை கை கொடுத்து தூக்குவதற்கு பதிலாக " முட்டாள் பார்த்து நடக்கமாட்டாயா? என்று திட்டியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன மணப்பெண். திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே இவ்வளவு மோசமா திட்டுறானே.. இவன் எதிர்காலத்தில் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துவானோ என்று நினைத்துப் பார்த்துள்ளார். அவ்வளவுதான் அடுத்த நிமிடமே கோர்ட்டுக்குப் போய் விட்டார். நீதிபதியை அணுகி, தனக்கும் தன்னைக் கட்டியவருக்கும் விவாகரத்து தருமாறு கேட்டுள்ளார். இதனை நீதிபதியும் ஏற்றுக் கொண்டு விவாகரத்து கொடுத்து அனுப்பி வைத்து விட்டார்.
திருமணம் முடிந்து வெறும் 3 நிமிடத்தில் அந்த மணப்பெண் விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டார். இந்த சம்பவம் இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது. துணிச்சலான முடிவெடுத்துள்ளதாக பலர் அந்தப் பெண்ணை பாராட்டுகின்றனர். சிலரோ, இதுக்கெல்லாமா டைவர்ஸ் பண்ணுவீங்க.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று விமர்சித்துள்ளனர்.
உண்மையில் இந்த சம்பவம் 2019ம் ஆண்டு நடந்ததாம். ஆனால் இப்போது அது குவைத் ஊடகங்களில் மீண்டும் செய்தியாக வலம் வருகிறது. இதென்ன பிரமாதம், கடந்த 2014ம் ஆண்டு பிரிட்டனில் திருமணம் முடிந்து வெறும் 90 நிமிடங்களில் ஒரு தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்துள்ள சம்பவமும் நடந்துள்ளது.