குப்பைமேனி... பேரைக் கேட்டதும் வித்தியாசமா இருக்குல்ல.. பட் சூப்பரான செடிங்க.. செம பவர்ஃபுல்!
- சந்தனகுமாரி
குப்பைமேனி.. கேட்டதுமே வித்தியாசமா இருக்குது இல்ல . ஆமாங்க குப்பை போன்ற மேனியை (தேகத்தை) குணப்படுத்தும் ஆற்றல் இந்த செடிக்கு உண்டு. அதனாலதான் இந்த செடிக்கு குப்பைமேனின்னு பெயர் வந்தது என்று சொல்றாங்கப்பா. வாங்க என்னான்னு பார்ப்போம்.
இது ஒரு மூலிகை செடியாகும். குப்பைமேனி செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்பாடு கொண்டவை. ஆமா, இந்த செடி, "மேனியை மட்டும் தான் குணப்படுத்துமா? அதுதான் இல்லை. பலவிதமான நோய்களையும் சரி செய்யும் மருத்துவ குணம் இந்த குப்பைமேனிக்கு உண்டு. இந்த மூலிகை செடி குப்பை மேட்டில் தான் அதிக அளவு வளர்ந்து இருக்கும். அதனாலும் கூட இதற்கு குப்பை மேனி என்ற பெயர் வந்தது.
நம்மில் பலரும் தொட்டாச் சிணுங்கி ஆகி விட்டோம்.. அதாவது, தொட்டதற்கெல்லாம் மருத்துவமனை செல்கின்றோம். ஆனால் நாமெல்லாம் சிறு வயதில் இருக்கும் போது நம்முடைய பெற்றோர்கள் அதிக அளவில் நமக்கு மூலிகை மருந்துகளையே தந்தார்கள். குறிப்பாக சொல்லப் போனால் கீழே விழுந்து கை ,கால்களில் காயங்கள் ஏற்பட்டால் உடனே குப்பைமேனி இலையை பறித்து அதனுடன் சிறிது கல் உப்பு ,சிறிது மஞ்சள் பொடி சேர்ந்து நன்றாக அரைத்து அடிபட்ட இடத்தில் பூசி விடுவார்கள். உடலில் ஏற்படும் தழும்புகள் மறையவும் இவ்வாறு செய்யலாம். நம்மைப் பொறுத்த வரைக்கும் இதுதான் அப்போதைய மருந்து.
மேலும் உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து குப்பைமேனி. குப்பைமேனி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து அந்தச் சாறை எடுத்து சொறி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வர காலப்போக்கில் அரிப்பு குறைந்து நோய் காணாமல் போய்விடும். குப்பைமேனி இலையை பறித்து நன்றாக காய வைத்து பொடி செய்து ஒரு கிராம் அளவுக்கு வெந்நீரில் சேர்த்து குடித்தால் சளி தொல்லை நீங்கும். சளி இருமலை கட்டுப்படுத்த குப்பைமேனி இலையின் காயவைத்த பொடியையும், துளசி இலை காய வைத்த பொடியையும் சிறிதளவு எடுத்து தேனில் கலந்து உண்டால் சளி, இருமல் தொல்லை நீங்கும்.
குப்பைமேனி இலை சாறு மலச்சிக்கலையும் கட்டுப்படுத்த வல்லது. உடலில் ஏற்படும் புழு, பூச்சிகள் காரணமாக மனிதர்களுக்கு ஊட்டச்சத்து குறைவு ஏற்படலாம். அதை அடியோடு நீக்க குப்பைமேனி இலையை நன்கு காய வைத்து பொடி செய்து அதை பாலுடன் கலந்து சாப்பிடலாம். அவ்வாறு செய்வதன் மூலம் உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் வெளியேறும். குப்பைமேனி வேரை எடுத்து கசாயம் செய்து 30 மில்லி குடிச்சா குடற்புழுக்கள் சட்டென்று செத்து விடுமாம்.
வயதான தாத்தா பாட்டிகள் மூட்டு வலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் கண்ட கண்ட எண்ணெய் தேய்த்தும் பலன் இருக்காது. குப்பைமேனி இலை சாறை நல்லெண்ணெயுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் வலி ஏற்பட்ட இடங்களில் தேய்த்து விடுவதால் அவர்களுக்கு வலி வேதனை குறையும். நல்ல பலனைக் காணலாம்.
நீங்களும் நேரம் கிடைக்கும்போது குப்பைகளில் சென்று குப்பைமேனி செடியை ரசித்து பாருங்கள். அப்போது உங்களுக்கு புரியும். குப்பைக்குள் குப்பைமேனி இவ்வளவு அழகாக இருக்கிறது என்று. குப்பைமேனியில் உள்ள அனைத்து பாகங்களும் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கியங்களையும் நமக்கு தருகின்றது. அது மட்டும் இல்ல குப்பைமேனி கீரை தொடர் நெஞ்சு சளியை உடனே குறைக்குமாம். சட்னி வச்சும் சாப்பிடலாம்.
அதெல்லாம் இருக்கட்டும், நம்மில் பலர் கிராமங்களிலிருந்து நகரங்களில் குடியேறியாச்சு. இங்க இதெல்லாம் காணலியே.. இப்போ குப்பைமேனி கிடைக்க என்ன செய்வது என்று யோசிக்கறீங்களா.. இப்பதான் தொட்டதுக்கு எல்லாம் ஆன்லைன் வந்தாச்சே.. ஆன்லைனிலும் கூட, குப்பைமேனி சோப் , குப்பைமேனி ஆயில், குப்பைமேனி பேஸ்பேக், குப்பைமேனி பவுடர், குப்பைமேனி தைலம் என அனைத்துமே ரெடிமேட் ஆக கிடைக்கின்றது.. தரமானதை வாங்கி அதையும் பயன்படுத்தலாம். குப்பைகளில் கிடைக்கக்கூடிய கோமேதகம் தான் குப்பை மேனி.. கிடைச்சா சரியான முறையில் பயன்படுத்தத் தவறாதீங்க.
(குறிப்பு: மூலிகைச் செடிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று பயன்படுத்துவது நல்லது. அலர்ஜி போன்றவை உள்ளோர் மருத்துவ ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்)