குடும்பம் குடும்பமாக மக்கள் பார்த்து ரசித்த குடும்பஸ்தன் படம்.. 28ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது!

Manjula Devi
Feb 06, 2025,04:30 PM IST

சென்னை: மக்களின் மனம் கவர்ந்த குடும்பஸ்தன் திரைப்படம் வரும் 28ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள்  நீண்ட நாட்களாக நீடித்து நிறைய படங்களில் நடித்து தனது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். ஆனால் வளர்ந்து வரும் ஒரு சில நடிகர்களோ நல்ல கருத்துகள் கொண்ட குறைவான படங்களில் நடித்து பிரபலமாகி மக்கள் மனதில் ஆணித்தரமாக இடம்பிடித்து விடுகின்றனர்.அந்த வரிசையில் நடிகர் மணிகண்டன் ஜெய் பீம், லவ்வர், குட் நைட் போன்ற படங்களில் நடித்து மக்களிடையே நன்மதிப்பை சம்பாதித்துள்ளார்.




அவர் நடிக்கும் படம் என்றால் தரம் கியாரண்டி என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். தற்போது இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற படத்தில் நடித்துள்ளார் மணிகண்டன். இவருடன் சாந்தி, மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  நடுத்தர குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரித்திருந்தது. வைசாக் இசையமைத்திருந்தார். 


இப்படம் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த ஒரு இளைஞன் எப்படி வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்ற சம்பவங்களை நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் மக்களுக்கு பிடித்த வகையில் காட்சியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.


அதே சமயத்தில் நாளுக்கு நாள் படம் நன்றாக இருக்கிறது என படம் குறித்து விமர்சகர்கள்  வெளிவர திரையரங்கிற்கு சென்று பார்க்கும் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் இப்படம் இதுவரை 18 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.


இந்த நிலையில் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம்  வரும் 28ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்