அண்ணாமலைக்கு எப்படி பணம் வருகிறது.. விசாரணை நடத்தணும்.. கே.எஸ்.அழகிரி!

Su.tha Arivalagan
Apr 16, 2023,11:02 AM IST

சென்னை: 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் இருக்கும் என்னால் அரசு வீட்டிற்கு ஒரு வருடமாக வாடகை கட்ட முடியவில்லை. இதனால் நோட்டீஸ் வந்திருக்கிறது. ஆனால் அண்ணாமலைக்கு மாதா மாதம் பணம் தருகிறார்கள். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது வீட்டு வாடகை, பிற செலவுகளை நண்பர்கள்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். தனது வீட்டு வாடகை 3 லட்சம், கைக் கடிகாரம் ரூ. 3. லட்சம் என்று புள்ளி விவரத்தையும் தெரிவித்திருந்தார்.


இது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. கொரோனா உச்சகட்டத்தில் தாண்டவமாடிக் கொண்டிருந்தபோது, ஏராளமான உயிர்கள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தபோது இந்த ஆடம்பரமான கைக்கடிகாரத்தை  வாங்கியுள்ளார் அண்ணாமலை   என்று பலரும் விமர்சித்துக் கொண்டுள்ளனர். அதேபோல அவரது வீட்டு வாடகை குறித்தும், நண்பர்கள் குறித்தும் கூட டிரோல் செய்து வருகின்றனர்.




இதுகுறித்து  எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டால், அட ஏங்க அவரைப் பத்தியே பேசறீங்க என்று கடுப்பாகி விட்டார். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இதுதொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், 50 ஆண்டு பொது வாழ்க்கையில் 2முறை சட்டமன்ற உறுப்பினர், 1முறை மக்களவை உறுப்பினர்,  காங்கிரஸ் தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ16000 வாடகைக்கு குடியிருக்கிறேன்.


1வருடமாக வாடகை கட்டவில்லை என நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன். ஆனால், 4 ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய  பாஜக தலைவர் அண்ணாமலை, மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? 3 லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுள்ளார் அழகிரி.