சிவராமன் - தந்தை அசோக்குமார் மரணம்.. தவறான செய்தி பரப்பினால் நடவடிக்கை.. போலீஸ் எச்சரிக்கை

Su.tha Arivalagan
Aug 23, 2024,05:07 PM IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பள்ளி பாலியல் பலாத்கார சம்பவ வழக்கில் முக்கியக் குற்றவாளியான சிவராமன் மற்றும் அவரது தந்தை மரணம் குறித்து தவறான செய்தி பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


சிவராமன் மற்றும் அவரது மரணம் தொடர்பாக இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை:




கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5.8.2024 முதல் 9.8.2024 தேதி வரை பள்ளியின் அனுமதியுடன் என்சிசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. மேற்படி முகாமை நடத்துவதற்காக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாவட்ட தலைவராக இருந்த சிவராமன் என்பவர் தான் என்சிசி பயிற்சி வழங்க முறையான அனுமதி பெற்றதாகவும் என்சிசி முகாம் நடத்தி தருவதாக கூறி இரண்டு பெண்கள் உட்பட ஐந்து நபர்களை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். மேற்படி முகாமில் பங்கு பெற்ற 17 மாணவிகள் உட்பட 41 மாணவர்கள் நான்கு நாட்கள் அந்த பள்ளியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


அப்போது சில மாணவியரிடம் எதிரே சிவராமன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக 17.8.2024 ம்தேதி பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட குழந்தை நல அலுவலர் ஆகியோர்கள் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் நேரில் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவம் தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் 14/24 u/s 5 (o) r/w6, 9 (o) r/w 10, 21 (2)  Pocso act 2012 and 238 BNS 17.8.2024ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது


மேற்படி வழக்கில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய மற்றும் சம்பவத்தை காவல்துறைக்கு தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் உட்பட 11 எதிரிகள் கைது செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கின் முக்கிய சிவா என்கிற சிவராமன் (வயது 35) என்பவர் 19.8.2024ஆம் தேதி சுமார் ஒரு மணி அளவில் பொன்மலை கோவில் அருகே தேவ சமுத்திரம் கிராமம் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லையில் கைது செய்ய உட்பட்ட போது எதிரி போலீசார் இடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது காலில் முறிவு ஏற்பட்டது. எதிரிக்கு எலும்பு முறிவு காரணமாக 19.8.2024 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 198 2024-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் பர்கூர் காவல் ஆய்வாளர் அவர்களால் எதிரி சிவராமனை கிருஷ்ணகிரி மருத்துவமனையில் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெறப்பட்டது. மேற்கொண்ட விசாரணையில் எதிரரி சிவராமன் கைது செய்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு எலி மருந்து உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார். மேலும் எதிரி எலிமருந்தை உட்கொண்டதை மருத்துவர்கள் எதிரியின் மெடிக்கல் ஹிஸ்டரி சீட்டில் குறிப்பிட்டுள்ளார். எதிரி சிவராமன் கடந்த 21/8/2024 ஆம் தேதி மதியம் 12.15 மணியளவில் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் . எதிரி சிவராமன் 21.8.2024 ஆம் தேதி சுமார் இரவு 7 மணி அளவில் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் 10:45 மணி முதல் 12 45 மணி வரை டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட்டது. மீண்டும் 22.08.2024ஆம் தேதி காலை 9:30 மணி முதல் 10 முடிவரை எதிரே சிவராமனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட்டது. இன்று அதிகாலை சுமார் 5:30 மணிக்கு எதிரி சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவர் தனது குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 9/7/2024 ஆம் தேதி எலிமருந்து சாப்பிட்டு டிசிஆர் மருத்துவமனை கிருஷ்ணகிரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.


இந்த நிலையில் நேற்று இரவு 10.15 மணிக்கு மேற்கண்ட வழக்கில் எதிரியான சிவராமன் என்பவரின் தந்தை அசோக்குமார் தனது இருசக்கர வாகனமான டிவிஎஸ் எக்ஸ்எல்லில் திம்மாபுரத்தில் இருந்து காவேரிப்பட்டினம் நோக்கி சென்ற போது தேர் பட்டி என்ற இடத்தில் விஷ்ணு மெடிக்கல்ஸ் அருகில் நிலை தடுமாறி கீழே விழுந்து தலை மற்றும் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே அசோக்குமார் உயிரிழந்துள்ளார். மேலும் இது சம்பந்தமாக அவரது மனைவி பத்மா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டினம் காவல் நிலைய குற்ற எண்  4685/24 u/s 281, 106 BNS பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரேதத்தை, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எதிரியின் தந்தை அசோக்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது தானாகவே நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்துள்ளார் என்பதை முதற்கட்ட விசாரணையிலும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததிலிருந்தும் தெரிய வருகிறது.


இவ்வழக்கின் எதிரி சிவராமன் இறப்பை பற்றியும் அவரது தந்தை அசோக்குமார் இறப்பை பற்றியும் ஏதேனும் தவறான செய்திகள் பரப்புவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்