கோலிகுண்டு கண்ணு.. கோவப்பழ உதடு.. அதை விடுங்க.. கோவைப்பழம் சாப்பிட்டிருக்கீங்களா?

Su.tha Arivalagan
Apr 09, 2024,06:27 PM IST

- பொன் லட்சுமி


கவிஞர்களுக்கு ரொம்பப் பிடித்த ஒரு விஷயம் என்னன்னா பழங்களாதான் இருக்கும் போல. அந்தக் காலத்துக் கவிஞர்கள் முதல் இக்காலத்து கவிஞர்கள் வரை உவமானம் சொல்வதற்கு பழங்களைத்தான் அதிகம் கையாண்டுள்ளனர். மூக்கை குடமிளகாயுடன் ஒப்பிடுவார்கள்.. கோவைப் பழ உதடு போல சிவந்து இருக்கிறது என்று  பொதுவாக சங்க கால புலவர்களும் சரி இன்றைய கவிஞர்களும் சரி  பெண்களின் உதட்டிற்கு உவமையாக கூறுவது இந்த கோவை பழங்களை தான்...


"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமின் புண் சிரிப்பும்" ..  அதாவது கோவைக் கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும்  புன்னகையையும்  என்று பெண்களின் உதட்டிற்கு கோவை பழத்தையே  உவமையாக கூறுகின்றனர்.. வெறும் உதாரணத்திற்கு மட்டும் இல்லைங்க.. கோவைப்பழத்தில் நமது ஆரோக்கியத்திற்குத் தேவையான பலவிதமான  சத்துக்களும் அடங்கியுள்ளன.. வாங்க அதைப் பார்ப்போம்


கோவை பழம்  :-




இந்தக் கோவை செடியில்   இலை முதல்  காய் வேர் தண்டு  பழம்  என  எல்லாவற்றிலுமே மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது.... சிறு வயதாக இருக்கும் போது  எங்கள் கிராமத்தில் சாலை  ஓரத்திலும் வேலி ஓரத்திலும்  வேப்பமரம் போன்ற மரங்களின் மீதும் இந்தச் செடி அதிகமாக காணப்படும்... பள்ளி படிக்கும் போது  பள்ளி முடிந்ததும் ஆண் பெண்  நண்பர்கள் ஒரு ஏழெட்டு பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு ஒவ்வொரு வேலியாக சென்று இந்த கோவை பழங்களை தேடுவோம்... 


நன்றாக பழுத்த பழம் மிகவும் சுவையாக இருக்கும்... சிகப்பு நிறத்தில் இருக்கும் இந்த பழம் கிளிகள் குருவிகளுக்கு மிகவும் பிடித்த பழம்... வேலியில் இருக்கும் பலத்தை மிகவும் சுலபமாக பறித்து விடுவோம்...  ஆனால் மரத்தில் கொடி சுற்றி இருக்கும் இந்த பழத்தை பறிக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.. அதற்காகவே பெரிய கம்பில் கொக்கி போன்று கட்டிக்கொண்டு போவோம்... பறிக்கும் பழங்களை பெரிய கவரில் போட்டு வீட்டிற்கு கொண்டு வருவோம்... பழங்கள் மட்டுமல்லாது காய்களையும் பறித்து கொண்டு வருவோம்... காய்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் காய வைத்து  நன்றாக காய்ந்ததும்  வடகம் போல் பொறித்து சாப்பிடுவோம்..


அது மட்டுமில்லாமல் அன்று  எங்கள் வீட்டில் ஆடுகளும் நிறைய  இருந்தது ஆடுகளும் இந்த கோவை செடியின் இலையை விரும்பி சாப்பிடும்... வரும்போது ஆடுகளுக்கும் தேவையான இலையை பறித்துக் கொண்டு வருவோம்... வெயில் காலத்தில் இந்த பழத்தை சாப்பிடும் போது உடம்புக்கு அவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும்... நிறைய பழங்கள் கிடைக்கும் போது அதை ஜூஸ் போட்டு குடிப்போம். அவ்வளவு ருசியாக இருக்கும்... அது மட்டும் இல்லாமல் இந்த இலையை பறித்து  அதனுடன் அடுப்புக் கறியும் சேர்த்து கசக்கி அந்தச் சாறைக் கொண்டு சிலேட்டை துடைப்போம் .. சிலேடு புத்தம் புதியதாக மாறிவிடும் .. அதை பார்க்கும் போது  கிடைக்கிற சந்தோஷமே தனி..


நன்மைகள் :-


இந்தக் கோவை பழத்திலும்  சரி காயிலும்  சரி அவ்வளவு நன்மைகள் இருக்கிறது... சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.. அது மட்டுமல்லாமல் வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும்,  ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கும்  சிறந்த மருந்து... கண் எரிச்சல் உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கும்  இந்த பழம்  ஒரு வரப்பிரசாதம்.. கிராமப்புறங்களில்  பாட்டி வைத்தியத்தில் இந்தக் கோவை செடிக்கு தனி மதிப்பு உண்டு...   இதன் இலையை பறித்து நிழலில் உலர்த்தி அதை பொடி செய்து வைத்து கொண்டு வாரத்துல ஒரு நாள் கண்டிப்பாக  கசாயம் செய்து குடித்து வருவார்கள்... அதனால் தான் இன்றும்  அந்த காலத்தில் உள்ள முதியவர்கள்  தெளிவான  கண் பார்வையோடு  இருக்கிறார்கள்... 


ஆனால் இன்றைய தலைமுறையினர்  எப்பொழுதும் கம்ப்யூட்டர் ஸ்மார்ட் போன் டிவி போன்றவற்றை அதிகமாக உபயோகித்துக் கொண்டிருப்பதால்  சிறுவயதிலேயே கண்ணாடி போட வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.. கண்களுக்கு மட்டுமல்லாது  சிலருக்கு தோல் அலர்ஜி ,  தடிப்பு சொறி சிரங்கு போன்ற பிரச்சனைகள் இருக்கும். அதற்கு  கோவை இலை, வேப்பிலை, மஞ்சள், போன்றவற்றை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு  மண் சட்டியில்  கொதிக்க வைத்து அந்த நீர் ஆறியதும்  உடல் எங்கும் பூசி வர  தோல் நோய்களிலிருந்தும்  விடுபடலாம்.


இன்றும் கடைகளில் இந்த கோவைப்பழம் கோவைக்காய் இரண்டுமே கிடைக்கிறது, ஆனாலும் இயற்கையாக அந்த செடியில் இருந்து பறித்து சாப்பிட்ட சந்தோசம்  இன்று கிடைக்கவில்லை.. உடம்பில் சிறு பிரச்சனை என்றாலும் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று யோசிக்காதீர்கள்... செலவே இல்லாமல் இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த மாதிரி உணவுகளை  சாப்பிடுங்கள்.. இயற்கை நமக்கு பலவிதமான   மூலிகைகளையும் பழங்களையும் தந்திருக்கிறது.. முடிந்தளவு இந்த மாதிரி இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள் .. நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழுங்கள்..


கோவையின் பயனை உணர்ந்து அதனைப்  முறைப்படி பயன்படுத்தினால் ஆரோக்கியமான உடலைப் பெற்று   நீண்ட நாளுடன் நோய் நொடி இல்லாமல் வாழலாம்!


என்ன பாஸ் இன்னும் என்ன யோசனை.. வெயில் காலம் ஆரம்பிச்சாச்சு. உடனே போங்க இந்த பழம் எங்கு கிடைக்கும்னு பாருங்க வாங்கி சாப்பிடுங்க...  அடிக்கிற வெயிலுக்கு உடம்புக்கு குளிர்ச்சியும்  கிடைக்கும் தேவையான சத்தும் கிடைக்கும்... ஒவ்வொரு காய், பழத்துக்கும் ஊருக்கு ஒரு பேரு இருக்கும்.. இந்த பழத்துக்கு எங்க  ஊரில்  கோவப்பழம்னு சொல்லுவாங்க... உங்க ஊர்ல இந்த பழத்துக்கு என்ன பெயர்னு தெரிஞ்சா கீழே கமெண்ட் பண்ணுங்க பாஸ்..!