"நீயா நானா"கோபிநாத்திற்கு... தமிழ் ஊடகச் செம்மல் விருது.. கெளரவித்த கொரிய தமிழ் சங்கம்!
சென்னை: கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நீயா நானா புகழ் கோபிநாத்துக்கு தமிழ் ஊடகச் செம்மல் விருது அளித்துக் கெளரவிக்கப்பட்டது.
கொரிய தமிழ் சங்கத்தின் சார்பில் 2023 ம் ஆண்டிற்கான கலை இலக்கிய சந்திப்பு மற்றும் கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் 2023 என்று விழா அக்டோபர் 29 ம் தேதி சியோலின் சொங்கனம் கச்சான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதுதொடர்பாக கொரியத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியாவின் ஓய்வுபெற்ற ஆட்சியாளர் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., ஊடகவியலாரும் எழுத்தாளரும் நடிகருமான நீயா நானா கோபிநாத் அழைக்கப்பட்டிருந்தனர். இவ்விழாவின் சிறப்பம்சமாக ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து பங்காற்றும் தமிழர்களுக்கு விருது வழங்கி மதிப்பளித்து ஊக்கப்படுத்துவது கொரிய தமிழ் சங்கத்தின் வழக்கம்.
கொரிய தமிழ்ச் சங்க கலைக் குழுவின் இசை நிகழ்ச்சிகள், நடனங்கள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. ஆனால் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த நீயா நானா கோபிநாத் சரியான நேரத்தில் விசா கிடைக்காததால் பங்கேற்க முடியாமல் போனது. அதே சமயம் காணொளி மூலமாக கொரிய தமிழ் மக்களை அவர் சந்தித்தார். இந்த விழாவில் நீயா நானா கோபிநாத்துக்கு "தமிழ் ஊடக செம்மல்" விருது வழங்கி கவுரவிப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியா வந்த கொரிய தமிழ் சங்க தலைவர் அரவிந்த ராஜா தலைமையிலான கொரிய தமிழ் சங்க உறுப்பினர்கள் குழு, சென்னையில் நீயா நானா கோபிநாத்தை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்து, "தமிழ் ஊடக செம்மல்" என்ற விருதினை வழங்கி கவுரவித்தனர். தனக்காக இந்தியாவிற்கே தேடி வந்து இந்த விருதினை அளித்து கவுரவித்ததற்காக நீயா நானா கோபிநாத் கொரிய தமிழ் சங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் கொரிய தமிழ் சங்கத்தின் தமிழ் சமூக வளர்ச்சி பணிகளுக்காக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
நீயா நானா கோபிநாத்துக்கு அறிமுகம் தேவை கிடையாது. பத்திரிக்கையாளர், செய்தி தொகுப்பாளர், எழுத்தாளர், நடிகர், இளைய சமூகத்தை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் ஊக்குவிக்கும் பேச்சாளர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். மக்கள் யார் பக்கம், நடந்தது என்ன?, என் தேசம் என் மக்கள் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 2006 ம் ஆண்டு முதல் நீயா நானா நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இதுதவிர, தெருவெல்லாம் தேவதைகள், ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க, நீயும் நானும், நேர் நேர் தேமா, பாஸ்வேர்டு, நிமிர்ந்து நில், எல்லோருக்கும் வணக்கம் உள்ளிட்ட பல புத்தகங்களையும், கவிதை நூல்களையும் எழுதி உள்ளார். 2002 ம் ஆண்டு ரமணா படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார் இவர். அதற்கு பிறகு வாமனன், தோனி, நிமிந்து நில் போன்ற படங்களில் கோபிநாத்தாகவும், திருநாள் படத்தில் ஏஎஸ்பி புகழேந்தியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.