Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
சென்னை: மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் இந்த உலகம் சொந்தமானது என்ற கதைக்களத்தில் நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள கூரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டு, படத்தின் கதை வித்தியாசமாக இருப்பதாக பாராட்டியுள்ளார்.
உண்மையிலேயே வித்தியாசமான கதைதான். இப்படிப்பட்ட வித்தியாசமான சிந்தனைகள் எப்போதுமே பிரமாதமாக இருக்கும். பிரமாண்டமாகவும் வரவேற்கப்படும். அதைச் செய்யத்தான் இங்கு ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் விலங்குகளை மையப்படுத்தி வரும் கதைகள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன. அதிலும் சமீபத்தில் வெளியான நாய்கள் ஜாக்கிரதை, நாய் சேகர், ஓ மை டாக், உள்ளிட்ட பல்வேறு படங்கள் மக்களிடையே பேராதரவு பெற்றதுடன் பாராட்டையும் பெற்றுள்ளது.
அந்த வரிசையில் தற்போது நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம்தான் கூரன். இப்படத்தை அறிமுக இயக்குனர் மருத்துவர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். இவர் சினிமாவின் மீது கொண்டுள்ள தீராத காதலால் தனது மருத்துவ பணியை விட்டுவிட்டு பல்வேறு குறும்படங்களை இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கூரன் கதை மிக மிக வித்தியாசமாக இருக்கிறது. யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத கதையும் ூட.
பொதுவாகவே மனிதர்கள் ஒரு விஷயத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று போராடுவார்கள். ஆனால் இந்தக் கூரன் படத்தில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் போய் போராடுகிறது. உயிர் என்றாலே பொதுதான். மனித உயிரும் விலங்கு உயிரும் ஒன்றுதான். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்லாமல் பறவைகள், விலங்குகள், மரங்கள், செடிகள், கொடிகள், மலைகள் இவைகளுக்குமானது தான் என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறது இந்த கூரன் படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் படம் அமைந்துள்ளதாம்.
நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த கதையின் நாயகனாக பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலிஸ் நாய் நடித்துள்ளது. இதனுடன் இணைந்து எஸ் ஏ சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன், சத்யன், பாலாஜி, சக்திவேல், ஜார்ஜ் மரியன், இந்திரஜா, ரோபோ சங்கர் போன்ற பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். மார்ட்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்ய சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். கனா ப்ரொடக்ஷன் சார்பில் கனா விபி கம்ப்பைன்ஸ்டன் இணைந்து தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் கூரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். அப்போது பர்ஸ்ட்லுக் போஸ்டர் நன்றாக இருப்பதாகவும் படத்தின் கதைக்களம் வித்தியாசமாக, சுவாரசியமாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.
இதில் நீதிமன்ற கூண்டில் ஒரு நாய் ஏறி நின்று நியாயம் கேட்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் வெளியீட்டிற்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்